A mysterious U.S. army barrel washed ashore in Quebec: கனடாவின் கியூபெக்கில், அமெரிக்க ராணுவ பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
சென்ற மாதம் 27ஆம் திகதி, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Île aux Canards என்னும் சிறு தீவில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள், அபாயகரமான ரசாயனங்கள் முதலான விடயங்களைக் கையாளும் hazmat குழுவினர் மற்றும் ஹெலிகொப்டர்களுடன் பொலிசார் அந்த தீவுக்கு விரைந்துள்ளனர்.
அந்த பீப்பாயை கவனமாகக் கையாண்ட நிபுணர்கள், அதிலிருந்து மாதிரிகளை சேகரித்து ஆல்பர்ட்டாவிலுள்ள Suffield நகரில் அமைந்துள்ள ராணுவ தளத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
இப்படி ஒரு பீப்பாய் பெரும் பரபரப்பை உருவாக்க காரணம் உள்ளது. அதாவது, அந்த பீப்பாயில் ’அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது’ என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த பீப்பாய் 1942ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், Christine மற்றும் Sébastien LeBlanc என்னும் இருவர், இதேபோன்றதொரு பீப்பாயை ஒரு தீவில் கண்டுபிடித்துள்ளார்கள்.
மார்ச் மாதம் வரை அதைப் பற்றி எந்தக் கவலையும்கொள்ளவில்லை. ஆனால், மார்ச் மாதம் Project N என்னும் ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது.
புலனாய்வுப் பத்திரிகையாளர்களான Vincent Frigon மற்றும் Yves Bernard என்னும் இருவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தில், அதிரவைக்கும் சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதாவது, இரண்டாம் உலகப்போரின்போது, ஜேர்மனி மீது வீசுவதற்காக, உயிரி ஆயுதம் ஒன்றை கனேடிய ராணுவம் தயாரித்ததாக அந்த புத்தகம் குறிப்பிட்டுள்ளது.
Grosse Île என்னும் தீவில் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வகத்தில், ஆந்தராக்ஸ் என்னும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
அந்த ஸ்போர்களை குண்டுகளில் நிரப்பி ஜேர்மன் நகரங்கள் மீது வீசுவதுதான் திட்டம்.
அந்த ஆய்வகம், 1943ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டுவரை இயங்கிவந்துள்ளது.
ஆனால், போர் முடியும் வரை அந்த குண்டுகள் தயாராகவில்லையாம். அவை குறித்து இந்த பத்திரிகையாளர்கள் அந்த விடயத்துடன் தொடர்புடைய Thomas Stovell என்னும் ராணுவ வீரரிடம் விசாரிக்க, அவர் அந்த ஆந்தராக்ஸ் ஸ்போர்களை, ஃபார்மால்டிஹைட் என்னும் கிருமிகளை கொல்லும் ரசாயனத்துடன் கலந்து, பின் அதை செயிண்ட் லாரன்ஸ் நதியில் கொட்டிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆக, அந்த பீப்பாய் இரண்டாம் உலகப்போர்க்காலத்தைச் சேர்ந்தது என்பதால், அதில் ஆந்தராக்ஸ் ஸ்போர்கள் இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டதாலேயேதான் கியூபெக் அதிகாரிகள் பரபரப்படைந்துள்ளார்கள்.
இந்நிலையில், அந்த பீப்பாயில் ஆந்தராக்ஸ் கிருமிகள் எதுவும் இல்லை என கியூபெக் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அந்த பீப்பாயை ஆய்வுக்குட்படுத்தியதில், அதற்குள் ஒரு திரவம் இருந்ததாக தெரிவித்துள்ள கியூபெக் பொலிஸ் செய்தித்தொடர்பாளரான Audrey-Anne Bilodeau என்பவர், அதனால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அந்த பீப்பாய் இரண்டாம் உலகப் போர்க்காலத்தைச் சேர்ந்தது என்பதாலும், அதன் பின்னால் ஒரு கதை உள்ளது என்பதாலுமே தாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும், ஆகவேதான் அது ஆய்வுக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அது என்ன திரவம் என்றோ, அது எங்கிருந்து வந்தது என்றோ பொலிசார் தெரிவிக்கவில்லை.


