TamilsGuide

கனடாவில் வங்கி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சூ செயின்ட் மேரி பகுதியில், தமக்குத் தெரிந்த நபரின் வங்கிப் பணக்கணக்கிலிருந்து மோசடியான முறையில் 100,000 டொலருக்கும் அதிகமான தொகையைத் திருடிய குற்றத்துக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜூலை 2026 இல் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து சூ செயின்ட் மேரி பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

2024 மார்ச் மாதம் முதல் 2026 ஓகஸ்ட் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தமக்குத் தெரிந்த நபரின் வங்கிப் பணக்கணக்கில் இருந்து 100,000 டொலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்து திருடியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 வயதான பெண்ணொருவரும் 31 வயதான ஆணொருவரும் முறையே நவம்பர் 2 மற்றும் நவம்பர் 3 ஆகிய திகதிகளில் பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று சரணடைந்தனர்.

அவர்கள் இருவர் மீதும் 5,000 டொலருக்கும் அதிகமான நிதி மோசடி மற்றும் 5,000 டொலருக்கும் அதிகமான திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஆண் எதிர்ரும் 2027ம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதியும், பெண் பெப்ரவரி 1 ஆம் திகதியும் நீதிமன்றத்தில் ஆஜராக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளனர். 
 

Leave a comment

Comment