TamilsGuide

தேர்தல் தோல்விக்கு காரணம் ஈரான் போர் - வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

ஈரான் விவகாரம், குடியரசுக் கட்சியின் இடைத்தேர்தல் தோல்விகளுக்கு ஒரு காரணமாக அமைந்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

குடியரசுக் கட்சிக்கு கிடைத்த தோல்விக்கு ஈரான் போர் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஈரான் மோதலால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு , அதனால் வாக்காளர்கள் மத்தியில் உண்டான அதிருப்தி போன்றவையே கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு வழிவகுத்தது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெறும் எனப் பல அமெரிக்கத் தொலைக்காட்சி வலைத்தளங்கள் கணித்துள்ளன.

அமெரிக்க நேரப்படி இரவு 9 மணியளவில் கிடைத்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சி 124 ஆசனங்களையும், குடியரசுக் கட்சி 75 ஆசனங்களையும் பெற்றுள்ளதாகச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் இத்தேர்தலில் மீண்டும் தேர்தலை எதிர்கொண்டுள்ளனர்.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவொரு கட்சிக்கும் 218 ஆசனங்கள் அவசியமாகும்.

தேர்தலுக்கு முன்னர் குடியரசுக் கட்சி 218 ஆசனங்களையும், ஜனநாயகக் கட்சி 214 ஆசனங்களையும் கொண்டிருந்தன.

மேலும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் இரண்டு வெற்றிடங்களும் காணப்பட்டன.

முன்னதாக, அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது.

இதற்கு முன்னர், ஜனநாயகக் கட்சி 2018ஆம் ஆண்டு முதல் பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்திருந்தது.

அப்போது ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்பின் முதலாவது பதவிக்காலத்தின் இடைப்பகுதியில் நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சியிடமிருந்து ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டைக் கைப்பற்றியிருந்தது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டு அமெரிக்க இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக செலவுமிக்க தேர்தல்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய ஜனாதிபதித் தேர்தல்களுக்கான செலவுகளையும் இது விஞ்சும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment