காலியான மதுபானப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையில் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளையும் உயர்த்துவதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பு நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காலியான போத்தல்களை உற்பத்தி செய்யும் நிறுவனம், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு, போத்தல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.
இதற்கமைய, 750 மில்லிலீற்றர் காலிப் போத்தலின் விலை 160 ரூபாவாகவும், 375 மில்லிலீற்றர் அரைப் போத்தலின் விலை 140 ரூபாவாகவும், 180 மில்லிலீற்றர் கால் போத்தலின் விலை 109 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன் நேரடித் தாக்கமாக, இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் 'கல்' (Gal) மதுபானப் போத்தல்களுக்கான வைப்புத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 750 மில்லிலீற்றர் போத்தலுக்கு 60 ரூபாவாக அறவிடப்பட்ட வைப்புத் தொகை தற்போது 100 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, 375 மில்லிலீற்றர் அரைப் போத்தலுக்கான வைப்புத் தொகை 40 ரூபாவிலிருந்து 70 ரூபாவாகவும், 180 மில்லிலீற்றர் கால் போத்தலுக்கான வைப்புத் தொகை 20 ரூபாவிலிருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட காலிப் போத்தல்களை மீண்டும் பெற்றுக்கொள்ளாத மதுபான உற்பத்தி நிறுவனங்கள், அவற்றுக்கான மேலதிகச் செலவையும் மதுபானத்தின் விலையுடன் சேர்த்து நுகர்வோரிடம் அறவிடத் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய, 750 மில்லிலீற்றர் 'கல்' மதுபானப் போத்தலின் விலை, 100 ரூபா வைப்புத் தொகையுடன் சேர்த்து தற்போது 3,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்தத் தொகையில் 360 ரூபா மதுபான விற்பனை நிலையங்களுக்குச் செல்வதுடன், அரசாங்கத்திற்கு மதிப்புக்கூட்டு வரியாக (VAT) சுமார் 611 ரூபா கிடைப்பதாகவும் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மதுவரி அதிகரிக்கப்படாத போதிலும், காலியான போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவு உயர்ந்துள்ளதால், அந்தச் சுமையை நுகர்வோரிடமே சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


