TamilsGuide

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது

மோட்டார் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதன் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தியமைக்குப் பயன்படுத்தப்பட்ட நிதியின் மூலத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகளின் அடிப்படையில், பிரதம பொலிஸ் பரிசோதகர் (CIP) வருணி போகஹவத்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்ட அவர், நேற்று (03) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றிய வருணி போகஹவத்தவிடம் இருந்த சொகுசு வாகனம் ஒன்றும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடியுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே குறித்த வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், குறித்த பொலிஸ் அதிகாரியின் மாதாந்த சம்பளம் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக உள்ள நிலையில், அவர் பயன்படுத்திய வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவு மாத்திரம் 1 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவாக இருந்துள்ளதாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், குறித்த வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கும் அதன் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தைக் கண்டறிவதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
 

Leave a comment

Comment