1,000cc-க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட அதிசக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களை விளையாட்டு உள்ளிட்ட விசேட தேவைகளுக்காக அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1,000cc-க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய சட்டக் கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்துகிறதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இவ்வாறான மோட்டார் சைக்கிள்களை விசேட நிபந்தனைகளின் கீழ், ஒதுக்கப்பட்ட பந்தயத் தடங்கள் அல்லது பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க முடியுமா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தற்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள அதிக எஞ்சின் திறன் கொண்ட சில மோட்டார் சைக்கிள்களை அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா என்றும் அவர் வினவியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பின்னர், இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


