TamilsGuide

ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த பலுசிஸ்தான் ராணுவ தளபதி படுகொலை: தாக்குதல் தொடரும் என பலூச் அறிக்கை

பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்த பலூச் விடுதலை ராணுவத்தின் தலைமை தளபதி பஷீர் ஜெப் பலூச், ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்தபோது தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தான், தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து சமீபத்தில் பாகிஸ்தானில் ஆபரேஷன் அல்மாஸ் என்ற பெயரில், வழிபாட்டு தளங்கள் மற்றும் காவல் நிலையங்கள் மீது பலுசிஸ்தான் போராளிகள் குழு தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக பலுசிஸ்தான் செய்தி தொடர்பாளர் மேஜர் குவாஹ்ராம் பலோச் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த பலுசிஸ்தான் போராளிகள் குழுவின் ராணுவ தலைமை தளபதி பஷீர் ஜெப் பலூச் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கந்தஹாரில் பலூச் ராணுவ தளபதி பஷீரை, அவரது பாதுகாவலர் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்ததாகவும், அதைத்தொடர்ந்து அவர் ஒரு ராணுவ மருத்துவமனைக்கு அவசரமாக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சமூக ஊடகங்களில் பலூச் ராணுவ தலைமை தளபதி இறந்துவிட்டதாக வந்த செய்தியை பலூச் விடுதலை ராணுவ குழு மறுத்துள்ளது.

இதுகுறித்து பலூச் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பலூச் குழுவின் மூத்த கட்டளை முடிவை தொடர்ந்து, இனி பலூச் விடுதலை ராணுவ குழுவின் தலைவராக பஷீர் ஜெப் பலூச் பணியாற்ற மாட்டார்.

புதிய தலைமை தளபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை, அனைத்து நிர்வாக ராணுவ மற்றும் கொள்கை வகுக்கும் அதிகாரங்கள் பலூச்சின் மூத்த கட்டளை குழுவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அனைத்து விதமான செயல்பாடுகளும் தடையின்றி தொடர்கின்றன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் புதிய தலைமை தளபதியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.


 

Leave a comment

Comment