TamilsGuide

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்

பொதுவாகத் திரையுலகில் முன்னணி நடிகர்கள் என்றாலே ஆடம்பரமான வாழ்க்கை, விலை உயர்ந்த கார்கள் எனப் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அவரது எளிமையையும், பொருட்களின் மீது அவர் கொண்டிருந்த பாசத்தையும் வெளிப்படுத்துகிறது.
பொங்கல் பண்டிகைக்கு ஒரு புதிய கார் வாங்க வேண்டும் என்று அவரது மனைவி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் பயன்படுத்தி வந்த கார் வாங்கி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதனால் புதிய கார் வாங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவரது மனைவி நினைத்துள்ளார்.
பொதுவாகத் திரைப்படக் கலைஞர்கள் நினைத்தால் உடனடியாகப் புதிய கார் வாங்கிவிடுவார்கள். ஆனால், தனது விஷயத்தில் மட்டும் ஏனோ அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை என்று எம்.ஜி.ஆர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், மனைவியின் விருப்பத்தில் நியாயம் இருப்பதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கலின்போதே புதிய கார் வாங்கலாம் என்று மனைவியின் விருப்பத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன், இரண்டு பேரிடம் கார்களின் விலை விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார். இதனால் மனைவியின் முகத்திலும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆனால், கார் வாங்குவது குறித்த பேச்சு ஒவ்வொரு முறையும் பேச்சாகவே முடிந்துவிட்டது. சில புதிய கார்களின் விலையைக் கேட்கும்போது அவருக்கே ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருந்துள்ளது.
அப்போது அவரைச் சுற்றியிருந்த திரையுலகப் பிரமுகர்களும் கார் விற்பனைத் தரகர்களும், “நீங்களா இப்படி விலை கேட்டுத் தயங்குகிறீர்கள்? உங்களால் புதிய கார் வாங்க முடியாதா?” என்று கேட்பார்களாம்.
தன்னால் எந்த விலை கொடுத்தும் புதிய மாடல் கார் வாங்க முடியும் என்றுதான் மற்றவர்கள் நினைப்பதாகவும், ஆனால் தனது தயக்கத்திற்குப் பின்னால் வேறொரு காரணம் இருப்பதாகவும் எம்.ஜி.ஆர் தெரிவித்துள்ளார்.
அந்தக் காரணம், தான் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வந்த பழைய காரின் மீதான பாசம்தான்!
தன்னிடம் இருக்கும் கார் ஒரு சாதாரண வாகனம் அல்ல என்றும், பல ஆண்டுகளாகத் தனது வாழ்க்கைப் பயணத்தில் துணையாக இருந்த ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியா முழுவதும் பல இடங்களுக்கு தன்னை அழைத்துச் சென்றது அந்தக் கார்தான். ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடிப்பதற்காக ஸ்டூடியோக்களுக்கு சரியான நேரத்தில் தன்னை அழைத்துச் சென்றதும் அதுதான்.
அதுமட்டுமின்றி, பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தன்னைச் சூழ்ந்து கொள்ளும் நேரங்களிலும் அந்தக் காருக்கும் தனி அடையாளமும் செல்வாக்கும் கிடைத்திருந்ததாகக் கூறியுள்ளார். தொலைவிலிருந்தே அந்தக் காரைப் பார்த்ததும் ரசிகர்கள் அதை அடையாளம் கண்டு தனது பெயரைச் சொல்லி ஆரவாரம் செய்வார்கள் என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களில் உடனிருந்த அந்தக் காரை, வெறுமனே பழையதாகிவிட்டது என்பதற்காக மாற்றிவிடத் தனது மனம் இடம் கொடுக்கவில்லை என்று நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியிருந்த ஒரு கருத்து மிகவும் அழகானது:
“பழசாகிவிட்டது என்பதற்காகச் சில நல்ல மனிதர்களை நம்மால் உதறிவிட முடிகிறதா? என் காரும் அப்படித்தான் என்று எனக்குத் தோன்றுகிறது.”

இறுதியில், தனது இந்தச் சமாதானங்களையும் காரணங்களையும் மனைவி ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை என்றாலும், பழைய கார் மட்டும் இன்னும் தன்னிடமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுவாரஸ்யமான அனுபவத்தை எம்.ஜி.ஆர், 'சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் எழுதிய கட்டுரையில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
புதிய கார் வாங்கும் வசதி இருந்தும், தன்னுடன் பல ஆண்டுகள் பயணித்த பழைய காரை ஒரு உயிரற்ற பொருளாகப் பார்க்காமல், உணர்வுப்பூர்வமான உறவாகக் கருதிய எம்.ஜி.ஆரின் இந்த நினைவுகள் அவரது மற்றொரு அழகான குணத்தை வெளிப்படுத்துகின்றன.

VR S Selvendhiran
 

Leave a comment

Comment