TamilsGuide

ஈரானை 10 நிமிடங்களில் எங்களால் தாக்க முடியும் - டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் அணுசக்தி திறன்களை அமெரிக்கா பெருமளவில் அழித்துவிட்டதாகவும், இன்னும் எஞ்சியுள்ள ஒன்று அல்லது இரண்டு இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த வேண்டியுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், "ஈரானின் அணுசக்தி நிலைகளை நாங்கள் அழித்துவிட்டோம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டுமே நாம் கையாள வேண்டியுள்ளது.

அதனை 10 நிமிடங்களில் எங்களால் செய்ய முடியும். குறிப்பாக 'பிக்ஏக்ஸ் மவுண்டன்' (Pickaxe Mountain) அணுவுலை மையத்தை இலக்கு வைத்து மிக விரைவாக எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும்" எனக் குறிப்பிட்டார்.

ஈரான் மீதான புதிய தாக்குதல்கள் குறித்துக் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், அவர்கள் நம்பகமானவர்கள் அல்ல என்று குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது மகன் முஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் ஈரான் உடனடி மற்றும் பலமான பதிலடி கொடுக்கும் என முஜ்தபா கமேனி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment