TamilsGuide

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய இளம்பெண் - ரூ.2 லட்சம் கோடி சொத்துக்களுடன் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் 

சீனாவில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பெண் ஒருவர், தற்போது ஆப்பிள் நிறுவனத்திற்கு டிஸ்ப்ளே தயாரித்து கொடுத்து, அதன்மூலம் சுமார் 2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் சீன கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

சீனாவை சேர்ந்த 56 வயதான ஷோ குஃபெய் தனது சிறுவயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு கடிகார கண்ணாடி தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியில் சேர்ந்தார்.

இங்கு இவருக்கு ஒரு நாளைக்கு சுமார் 100 ரூபாய் சம்பளமாக கிடைத்துள்ளது.

இதையடுத்து இவர் தனது 23 வது வயதில் கண்ணாடி பதப்படுத்தும் தொழிற்சாலையை சொந்தமாக தொடங்கினார்.

பின்னர் அவர் லென்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கி, ஸ்மார்ட்போன்களுக்கு கண்ணாடி டிஸ்ப்ளேக்களை தயாரித்து கொடுக்கும் பணியை தொடங்கினார்.

2007-ல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு கண்ணாடி டிஸ்ப்ளேக்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற பிறகு, அந்நிறுவனம் விரைவான வளர்ச்சியை அடைந்தது.

ஆப்பிள் நிறுவனத்துடனான வணிகம் லென்ஸ் டெக்னாலஜிக்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக மாறியதுடன், ஷோவை சீனாவின் மிகப் பெரிய செல்வந்த பெண்ணாக மாற்றவும் உதவியது.

இந்த நிலையில் கண்ணாடி உற்பத்தி நிறுவனமான லென்ஸ் டெக்னாலஜி மூலம் ஷோ, சுமார் 1,80,692 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தி இன்டிபென்டன்ட் பத்திரிகை வெளியிட்ட 'ஹுருன் சீனாவின் பணக்கார பெண்கள் 2026' பட்டியலில், கடந்த ஆண்டில் அவரது செல்வம் 15% அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
 

Leave a comment

Comment