TamilsGuide

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது - 7 ஆண்டு கோமாவில் இருந்த கணவரை மீட்ட மனைவி

"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது" என்ற சினிமா வரிகளை நிஜமாக்கும் வகையில், சீனாவில் நெகிழ்ச்சியான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கி 7 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவரை, அவரது மனைவியின் அசாத்தியமான காதலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் மீட்டுக்கொண்டு வந்துள்ளது.

சீனாவின் ஹெனான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாவோ. இவருக்கு சாங்மெய் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சோகப் புயல் வீசியது.

ஜாவோ வேலை செய்து கொண்டிருந்த ஒரு கிடங்கின் மேற்கூரையில் சிக்கி, உயிருக்குப் போராடிய 3 வயதுக் குழந்தையை அவர் துணிச்சலாகக் காப்பாற்றினார். குழந்தையைத் தனது மார்போடு அணைத்தபடி 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், ஜாவோவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாவோவை பரிசோதித்த மருத்துவர்கள், "இனி இவருக்கு சுயநினைவு திரும்புவது சாத்தியமில்லை. வருடக் கணக்கில் இவரைப் பராமரிப்பது உங்களுக்குப் பாரமாகவே இருக்கும்" எனக் கூறி கைவிரித்தனர்.

ஆனால், சாங்மெய் தனது கணவரைக் கைவிட மறுத்துவிட்டார். "என் காதல் உண்மையானால் அவர் மீண்டு வருவார்" என்ற வைராக்கியத்துடன், கடந்த 7 ஆண்டுகளாகத் தினமும் தனது கணவரின் அருகில் இருந்து அவரைப் பராமரித்து வந்தார். மருத்துவர்களின் அறிவுரைப்படி மசாஜ் செய்தும், கைகால் விரல்களை நீவிவிட்டும் உணர்ச்சியைத் தூண்டினார்.

கணவருக்குக் கேட்காது என்று தெரிந்தும், அவர்கள் காதலித்த காலத்திலும், மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களிலும் பேசிக்கொண்ட விஷயங்களைத் தினமும் அவரது காதுக்கு அருகில் சென்று சாங்மெய் பேசிக் கொண்டே இருந்தார்.

பதில் வராது எனத் தெரிந்தும், அவரது உள்மனம் இதைக் கேட்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருந்தது.

சாங்மெய்யின் 5 ஆண்டுக்கால தொடர் போராட்டத்திற்குப் பலனாக, கடந்த 2024-ஆம் ஆண்டில் ஜாவோவின் உடலில் லேசான அசைவுகள் தெரியத் தொடங்கின. அதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட தீவிர மறுவாழ்வுப் பயிற்சிகளின் விளைவாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாவோ தனது கண்களைத் திறந்தார்.

அருகில் நின்ற மனைவியைப் பார்த்ததும் அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. சிரமப்பட்டுத் தனது மனைவியை நோக்கி, "சாங், ஐ லவ் யூ" என்று அவர் கூறினார். 7 வருடக் காத்திருப்புக்குப் பின் கணவரின் வாயில் இருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு சாங்மெய் கண்ணீர் மல்க அவரை ஆரத்தழுவிக் கொண்டார்.

தற்போது ஜாவோ இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்றாலும், பேசுவதைப் புரிந்துகொண்டு, கைகளை உயர்த்திப் பதில் சைகை செய்கிறார். சிறிது நேரம் அவரால் எழுந்து நிற்கவும் முடிகிறது. இன்னும் சில மாதங்களில் அவர் பூரண குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்புவார் என மருத்துவர்கள் தற்பொழுது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இத்தம்பதியரின் கதை, "உண்மையான காதல் என்றும் தோற்பதில்லை, அது எல்லாவற்றையும் விட வலிமையானது" என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளது.
 

Leave a comment

Comment