TamilsGuide

மக்காவை நோக்கி வந்த ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் அழிப்பு

சவுதி அரேபியாவின் மக்கா பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட ஹூதி கிளர்ச்சியாளர்களுக்குச் சொந்தமான ஆளில்லா வானூர்தி ஒன்று இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக சவுதி தலைமையிலான யேமன் கூட்டணிப் படை தெறிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (30) இடம்பெற்றதாக கூட்டணிப் படையின் பேச்சாளர் துர்கி அல் மாலிகி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹூதி பயங்கரவாதப் படையினரால் ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி மக்கா பிராந்தியத்தில் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, மேற்கு சவுதி அரேபியாவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் குரூஸ் ஏவுகணை ஒன்றையும் தமது வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சவுதி தலைமையிலான கூட்டணிப் படைக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் அண்மைய நாட்களாக இராணுவ நடவடிக்கைகளும் தாக்குதல்களும் அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில், சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட இலக்குகளை நோக்கி ஆறு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் நேற்று (29) தெரிவித்திருந்தனர்.

2014 செப்டெம்பர் மாதம் யேமனின் தலைநகர் சனாவைக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சவுதி தலைமையிலான கூட்டணி மார்ச் 2015 முதல் யேமன் மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment