TamilsGuide

ஒருவரின் கண்ணுக்குள் முளைத்த விதை - மருத்துவர்கள் ஆச்சர்யம்

ரஷ்யாவைச் சேர்ந்த 42 வயதுடைய மாக்சிம் ஸ்லெப்ட்சோவ் என்பவரின் கண்ணுக்குள் விதையொன்று முளைத்த சம்பவம் மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாக்சிம் ஸ்லெப்ட்சோவ் , சைபீரியாவில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது, மரக்கிளையொன்று அவரது கண்ணில் பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் வலியைத் தொடர்ந்து கண்ணைக் கழுவிய அவர், கண்ணில் இருந்த சிறிய மரப்பட்டையொன்றையும் அகற்றியுள்ளார்.

எனினும், கண்ணுக்குள் சிக்கியிருந்த சிறிய விதையை அவரால் கண்டறிய முடியவில்லை. தொடர்ந்து, நான்கு மாதங்களாகக் கடுமையான தலைவலி, கண் அழற்சி மற்றும் இரட்டைப் பார்வை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மாக்சிம் ஸ்லெப்ட்சோவ் யாகுட்ஸ்க் நகரிலுள்ள கண் சிகிச்சை நிலையத்திற்குச் சென்றபோது, அவரது கண்ணின் வெண்பகுதியை மூடியுள்ள மெல்லிய திசுவுக்குள் விதை முளைத்து, அதன் வேர் சுமார் 3 மில்லிமீற்றர் நீளத்திற்கு ஊடுருவியிருந்தமை கண்டறியப்பட்டது.

மருத்துவர்கள் மயக்க மருந்தைப் பயன்படுத்தி, ஊசி மூலம் முளைத்த விதையை அகற்றியதை தொடர்ந்து அவரது கடுமையான தலைவலியும் நீங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இவ்வாறான சம்பவத்தைத் தனது மருத்துவ அனுபவத்தில் இதுவரை சந்தித்ததில்லை என கண் மருத்துவர் எலிசபெத்தா கார்போவா தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment