TamilsGuide

பேரழிவின் விளிம்பில் 3 இலட்சம் மக்கள் - இமயமலையில் வேகமெடுக்கும் அபிவிருத்திப் பணிகள்

இமயமலைப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இயற்கை அனர்த்தங்களின் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகப் புதிய விஞ்ஞான ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச ஊடகங்களின் தகவல்களின்படி, நேபாளத்தின் வடக்குப் பகுதிகள், திபெத்தின் தென்கிழக்குப் பகுதிகள் மற்றும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகள் இந்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

Scientific Reports என்ற ஆய்வுச் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இயற்கை அனர்த்த அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் பரப்பளவு, 2016 முதல் 2023 வரையான காலப்பகுதியில் சுமார் 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பனிப்பாறை ஏரிகள் நிரம்பி வழிவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டுமானப் பணிகள் சுமார் 78 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன், நேபாளம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஒன்பது ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, இமயமலைப் பிராந்தியத்தில் சுமார் 1,360 பனிப்பாறை ஏரிகளும், அவற்றுடன் தொடர்புடைய ஆறுகளின் கீழ்ப்பகுதிகளில் 50 கிலோமீற்றர் வரையான பிரதேசங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறையின் விரிவாக்கம், நீர்மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணம், வீதிப் புனரமைப்பு மற்றும் புதிய வீடுகள், உணவகங்களின் கட்டுமானம் ஆகியவை இந்த அபாயம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நேபாளத்தின் முக்கிய சுற்றுலா நகரமான பொக்கராவும் இந்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள பழைய கட்டடங்களை அகற்றுவது அங்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற அன்னபூர்ணா மலைப்பாதைப் பிராந்தியத்திலும் ஆற்றங்கரையோரக் கட்டுமானப் பணிகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அண்மைக்கால வெள்ளப்பெருக்குகள் மற்றும் மண்சரிவுகள் அப்பகுதியின் சுற்றுலாத்துறையையும் பாதித்துள்ளன.

உலகின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் வேகத்தைவிட, இமயமலைப் பிராந்தியத்தின் வெப்பநிலை சுமார் இருமடங்கு வேகத்தில் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதுடன், பனிப்பாறை ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஏரிகளைத் தடுத்து நிறுத்தும் இயற்கையான அணைகள் உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

1940ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் மட்டும் பனிப்பாறை ஏரிகள் நிரம்பி வழிதல் மற்றும் அவற்றின் இயற்கையான அணைகள் உடைதல் தொடர்பாக சுமார் 30 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாளத்தைப் பாதித்த கடுமையான வெள்ளப்பெருக்குகளில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டோபர் 11ஆம் திகதி புத்தி கந்தகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 200 வீடுகள் சேதமடைந்ததுடன், ஐந்து பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கட்டுமான மற்றும் அபிவிருத்தித் தீர்மானங்களே அடுத்த பல தசாப்தங்களுக்கான இயற்கை அனர்த்த அபாயத்தைத் தீர்மானிக்கும் என இந்த ஆய்வின் பிரதான ஆய்வாளர் சி. ஸ்கொட் வொட்சன் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், ஆற்றங்கரைகளில் அனுமதியற்ற கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தவும், அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் குடியிருப்புகளை வரையறுக்கவும் நேபாளம் மற்றும் இந்திய அதிகாரிகள் புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இமயமலைப் பிராந்தியத்தில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து அதிகரித்தால், எதிர்காலத்தில் பெருமளவிலான மக்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 

Leave a comment

Comment