TamilsGuide

அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை.. என் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றே புரியவில்லை - டைகர் ஷெராப் 

தன் கார் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் அவரது இல்லத்திற்கு சென்றபோது பேசிய டைகர் யாருடனும் தனக்கு எந்த விரோதமும் இல்லாதபோது ஏன் தாக்கப்பட்டேன் என்று புரியவில்லை என்றும், இன்னும் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும் அவர் கூறியதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அக்டோபர் 18 அன்று மாலை சுமார் 7 மணியளவில் கால்பந்து பயிற்சியை முடித்துவிட்டு அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மும்பை ஜூஹு பகுதியில் ​​பைக்கில் வந்த மர்ம நபர்கள், டைகர் பயணித்த பிஎம்டபிள்யூ காரை நோக்கி சுட்டனர்.

அப்போது, ​​காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த டைகர் ஷெராப் காயமின்றி தப்பித்தார்.

ஆனால் கார் ஓட்டுநர் மற்றும் வோல்கர் உமேஷ் சௌஹான் ஆகியோர் காயமடைந்தனர். டைகர் உடனடியாக , காரைத் தானே ஓட்டிச் சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்தத் தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு தப்பி ஓடிய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

பூல் சிங் (18), ரேஹான் ரைசுதீன் அன்சாரி (18), மற்றும் பீகாரை சேர்ந்த ஹிருத்திக் குமார் என்ற ரோஷன் (22) ஆகியோர் மறுநாள் ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுடன் இந்த வழக்கு தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு காவல்துறை இதுவரை 11 பேரைக் கைது செய்துள்ளது.

சல்மான் கானுடனான டைகர் ஷெராபின் நெருக்கமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.

Leave a comment

Comment