சவுதி அரேபியாவில் நிகழ்ந்து வரும் தாக்குதல்களை செல்போனில் படம்பிடிக்க கூடாது என அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏமனில் கடந்த 2015 முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால் ஏடனை தற்காலிக தலைநகராக கொண்டு சவுதி அரேபியா மற்றும் மேற்குலக ஆதரவு பெற்ற ஏமன் அரசு இயங்கி வருகிறது.
மறுபுறம் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தடையாக இருக்கும் சவுதி அரேபியா மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த மாதம் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதான ஹவுதி தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் முதல் ஹவுதிக்களுக்கும் ஏமன் அரச படைகளுக்கும் இடையே மொதல் அதிகரித்துள்ளது. ஹவுதி ஆளும் பகுதிகளில் சவுதி அரேபியாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக சவுதியில் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால், அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்பு இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இந்திய தூதரகம், "சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள், அந்த நாட்டின் உள்ளூர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இடைமறித்து அழிப்பது தொடர்பான நிகழ்வுகளை படம் பிடிப்பதையோ அல்லது அது குறித்த தகவல்களை வெளியிடுவதையோ தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு நிகழ்வுகளை படம்பிடிப்பது, அது குறித்த தகவல்களை வெளியிடுவது அல்லது பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்" என அறிவுறுத்தியுள்ளது.


