பிரபல நடிகர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது- ஐஸ்வர்யா ராஜேஷ்
சினிமா
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து ஐஸ்வர்யா ராஜேஷ் மீது ரசிகர்களுக்கு தனி ஈர்ப்பு. ஆனால் அவருக்கோ பிரபல நடிகர் மீது அவ்வளவு ஈர்ப்பு. இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சினிமாவில் கதாநாயகி ஆவதற்கு முன்பே சுசாந்த் சிங் ராஜ்புத் மீது எனக்கு மிகுந்த பிரியம் இருந்தது. அவரை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரிய ஆசை எனக்குள் இருந்தது.
அப்போது மட்டுமல்ல இப்போதும் அவர் மீது உள்ள ஈர்ப்பு அப்படியே இருக்கிறது. கோவா திரைப்பட விழாவிற்கு ஒருமுறை சென்றிருந்தபோது அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் புகைப்படம் எடுக்க முடிவு செய்து திரைப்பட விழாவிற்கு பிறகு நடக்கும் இரவு விருந்துக்கு சுஷாந்த் வருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் அவர் விருந்துக்கு வராததால் ஏமாற்றம் அடைந்தேன்.
ஓட்டலில் நான் தங்கி இருந்த அறைக்கு அடுத்த அறையில் தான் அவர் இருந்தார் என்பது பின்னர் தான் தெரியவந்தது. அவ்வளவு அருகில் இருந்தும் அவரை சந்திக்க முடியாமல் போனது எனக்கு வலியை ஏற்படுத்தியது. நமக்கு பிடித்தமான நடிகருடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை என்ற ஏமாற்றம் அப்போது ஏற்பட்டது.
சுஷாந்த் ஒரு அற்புதமான நடிகர். அவர் மிக இளம் வயதில் மறைந்தது வருத்தம் அளிக்கிறது. அவர் மீதான எனது அபிமானம் இன்னும் குறையவில்லை. அவர் மீது ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.





















