• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லவ் ஆல்வேஸ் வெப் தொடரின் டிரெய்லர் வெளியீடு

சினிமா

புகழ்பெற்ற கிரேஸி மோகனின் AI குரல் இடம்பெறும், தமிழ் ஃபேண்டஸி-காமெடி ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் டிரெய்லரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டது.

மதுமிதா இயக்கத்தில், 8 எபிசோடுகளைக் கொண்ட இத்தொடர், வயது பின்னோக்கிச் செல்லும் கற்பனை கருவோடு, நகைச்சுவை மற்றும் சுவாரசியமான கதாபாத்திரங்களுடன் வரும் 30ம் தேதி அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது.

இந்த டிரெய்லருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, புகழ்பெற்ற தமிழ் நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான மறைந்த 'கிரேஸி' மோகனின் AI தொழில்நுட்பத்தால் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட குரல் இடம்பெற்றுள்ளது.

மாயா மற்றும் கௌரி ஜி.கிஷன் ஆகிய இருவரும் ரம்சானுடன் தொடர்ந்து மோதிக்கொள்வதும், அதனால் ஏற்படும் சுவாரசியமான சண்டைகள், தவறான புரிதல்கள் மற்றும் கலாட்டா நிறைந்த நகைச்சுவைக் காட்சிகள் என இத்தொடரின் டிரெய்லர் ரகளையாக அமைந்துள்ளது.

இத்தொடரில் கௌரி ஜி.கிஷன், ரம்சான் முகமது, ஜெயபிரகாஷ், ஜெயசுதா மற்றும் மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களின் துடிப்பான நடிப்பு, ரொமான்ஸ், ஃபேமிலி டிராமா மற்றும் எமோஷனல் காட்சிகள், தொடருக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

இதுகுறித்து இயக்குநர் மதுமிதா பேசியதாவது:-

கிரேஸி மோகன் சாரோட எழுத்து எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான். மிக எளிய சூழ்நிலைகளிலும் நகைச்சுவையை உருவாக்குவதற்கான அவரது திறன், அதாவது அவரது கூர்மையான வார்த்தை விளையாட்டுகள் மற்றும் அற்புதமாக யூகிக்க முடியாத கதாபாத்திரங்கள், ஒரு மாஸ்டர் கிளாஸ் ஆகும்.

அவரைப் போன்ற ஒரு நகைச்சுவை எழுத்தாளர் இன்றும் இல்லை, இனிமேலும் வர மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.

‘லவ் ஆல்வேஸ்’ தொடர் மூலம், நானும் சபரியும் அந்த நகைச்சுவைச் சுவையை ஒரு நவீன ஃபேண்டஸி உலகிற்குள் கொண்டுவர முயன்றோம். அவரது நகைச்சுவை பாணியைக் கருத்தில் கொண்டு இத்தொடரை வடிவமைத்து அணுகினோம்.

மாயப் பதக்கத்திற்காக அவரது குரலை AI மூலம் மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்தியது, பல தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கும் அந்த லெஜெண்டுக்கு நாங்கள் செலுத்திய மனமார்ந்த அஞ்சலியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply