TamilsGuide

உக்ரைனின் ஒலெஷ்கி நகரில் தற்காலிக போர் நிறுத்தம் - வெள்ளை மாளிகை அறிவிப்பு

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலெஷ்கி நகரில், ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் தற்காலிக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மனிதாபிமான உதவிகளை நகருக்குள் கொண்டு செல்வதற்கும், பாதுகாப்பான பாதை வழியாகப் பொதுமக்களை வெளியேற்றுவதற்கும் வாய்ப்பளிப்பதே இந்தப் போர் நிறுத்தத்தின் நோக்கமாகும்.

எனினும், இந்தப் போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்யா இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைனின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் டேவிட் அரகாமியா, ஒலெஷ்கி நகரில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கும் பொதுமக்களை வெளியேற்றுவதற்குமான மனிதாபிமானப் பாதைகளை உருவாக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நகரில் எஞ்சியுள்ள மக்களுக்கு உணவு, மருந்துகள், மருத்துவச் சிகிச்சை மற்றும் சுத்தமான குடிநீர் ஆகியவை அவசரமாகத் தேவைப்படுவதாக மெலனியா ட்ரம்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போருக்கு முன்னர் சுமார் 24,000 பேர் வசித்த ஒலெஷ்கி நகரில் தற்போது 1,700 முதல் 2,000 பேர் வரை வசிப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின்படி, இரு நாடுகளையும் சேர்ந்த சிவில் குழுக்கள் வீடுகளுக்குச் சென்று மக்களின் தேவைகளைக் கண்டறியவுள்ளன.

மேலும், ரஷ்யா அல்லது உக்ரைனுக்குச் செல்ல விரும்புவோருக்கான போக்குவரத்து வசதிகளையும் ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்கு அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment