TamilsGuide

விலங்கு என முத்திரை குத்தி அசிங்கப்படுத்திய உறவினர்கள்..! 

விலங்கு என முத்திரை குத்தி அசிங்கப்படுத்திய உறவினர்கள்..! அனாதையாக விட சொல்லிய கொடுமை. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று பதிலடி கொடுத்த கூலித்தொழிலாளியின் மகள்.. இதுதான் உண்மையான வெற்றி.!

ஒரு காலத்தில் உறவினர்களால் “வாத்து” என்றும், விலங்குகளுடன் ஒப்பிடப்பட்டும் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு பெண், இன்று தனது அசாத்திய முயற்சியால் நாட்டையே நிமிரச் செய்துள்ளார்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் தீப்தி ஜீவன்ஜி.

ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மின்னல் வேகத்தில் ஓடிய தீப்தி, 56.36 வினாடிகளில் இலக்கைக் கடந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு ஹங்சோ நகரில் நடைபெற்ற போட்டியிலும் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளேடா கிராமத்தில் பிறந்த தீப்தி, பிறவியிலேயே அறிவுசார் குறைபாட்டுடன் பிறந்தார். சிறிய தலை மற்றும் வழக்கத்திற்கு மாறான முக அமைப்பு காரணமாக, கிராம மக்களும் சொந்தக்காரர்களும் இவரை விலங்குகளுடன் ஒப்பிட்டு இழிவாகப் பேசினர். தீப்தியின் பெற்றோரிடம் அநாதையாக விட்டுவிடுமாறு சிலர் அறிவுறுத்தினர். ஆனால், தினக் கூலித் தொழிலாளர்களான அவரது பெற்றோர்கள் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி மகளை அரவணைத்துப் வளர்த்தனர்.

தீப்தியின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தவர் அவரது பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பியானி வெங்கடேஷ்வெர்லு ஆவார். தீப்தியின் திறமையை அடையாளம் கண்ட அவர், ஓட்டப் பயிற்சிக்கு வழிவகுத்தார். பிரபல பேட்மிண்டன் ஜாம்பவான் புல்லேலா கோபிசந்தின் ஆலோசனையின்படி ஐதராபாத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர் அதிகாரப்பூர்வமாக பாரா-வீராங்கனையாகக் களம் இறங்கினார். தற்போது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை அவர் உயர்த்திப் பிடித்துள்ளார்.

இதே போட்டியில் ஜெவலின் த்ரோ போட்டியில் கலந்துகொண்ட பிரதீப் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். மேலும், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பாவினா படேல் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனா நாட்டின் 8 முறை பாராலிம்பிக் சாம்பியனான ஜாங் பியான் என்பவரை எதிர்த்துப் போராடிய பாவினா, இறுதி வரை போராடி வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கினார்.

நன்றி செய்தி சோலை

Leave a comment

Comment