• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானில் சமூக ஊடகக் கருத்தால் 23 வயது மாணவிக்கு மரண தண்டனை

ஈரானில் சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் 23 வயது மாணவி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நஜ்மா அமினி என அடையாளப்படுத்தப்படும் குறித்த மாணவி, சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு கடந்த செப்டெம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல என்றும், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரை 34 ஆண்கள் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நஜ்மா அமினி உட்பட ஒன்பது பெண்கள் அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்காக மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து ஈரானிய மனித உரிமைகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம், ஈரானில் கருத்துச் சுதந்திரம், மதம் தொடர்பான சட்டங்கள் மற்றும் மரண தண்டனை நடைமுறை குறித்து மீண்டும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

Leave a Reply