சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுகிறேன் - அமிதாப் பச்சன் உருக்கமான பதிவு
சினிமா
பாலிவுட்டின் முன்னணி மூத்த நடிகரான அமிதாப் பச்சன் (வயது 84), தனது சமூக ஊடகப் பதிவுகளில் இருந்து சில நாட்கள் தற்காலிகமாக ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
வழக்கமாக சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி, ரசிகர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருக்கும் அமிதாப் பச்சனின் இந்த திடீர் அறிவிப்பு, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பெரும் கவலையையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அமிதாப் பச்சன் பகிர்ந்திருப்பதாவது, "மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் சில நாட்கள் முழுமையாக ஓய்வெடுத்து உடல்நலனைத் தேற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளேன். எனவே, என்னால் தற்போது எந்தப் பதிவுகளையும் எழுத இயலவில்லை," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் இணைந்து நடித்த 'வேட்டையன்' திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
தற்போது அவர் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கல்கி 2898 AD - பாகம் 2' திரைப்படப் பணிகளில் பிஸியாக உள்ளார். இது தவிர, சோனி தொலைக்காட்சியின் புகழ்பெற்ற 'கோன் பனேகா குரோர்பதி' வினாடி-வினா நிகழ்ச்சியையும் அவர் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
மெகாஸ்டார் அமிதாப் பச்சன் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் சமூக வலைத்தளங்களுக்குத் திரும்ப வேண்டும் என திரையுலகினரும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.






















