பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவுக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் நேற்றைய தினம் இசுறுபாயவிலுள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர், அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுகளை நடத்தும் முறை மற்றும் முழுமையான ஆட்சேர்ப்புச் செயல்முறையை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் முறையான வகையிலும் முன்னெடுப்பது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இவ்விடயம் தொடர்பாகத் தற்போது சமூகத்தில் பேசப்பட்டு வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என வலியுறுத்திய பிரதி அமைச்சர், இவ்விடயம் தொடர்பில் சில தரப்பினரால் பரப்பப்படும் தவறான கருத்துக்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மிக விரைவாகவும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைச் சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவினர், அமைச்சின் மேலதிகச் செயலாளர் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


