TamilsGuide

கொடுத்துச் சிவந்த கரங்கள்- இயக்குநர் பி.வாசு பேட்டி.

எம்.ஜி.ஆரின் உதவும் குணம் ஊர் அறிந்தது. அதுவும் தன்னுடனேயே இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தொட்டுத் தூக்கும் முதல் கரம் புரட்சித் தலைவருடையதாகத் தான் இருக்கும்.

அப்படி தனது மேக்கப் மேன் பீதாம்பரத்துக்கு ஒரு நெருக்கடி என்றதும் புரட்சித் தலைவர் என்ன செய்தார் என்பதைப் பற்றி விரிவாகப் பேசினார் அவரது மகன் இயக்குநர் வாசு.

“இரண்டு இமயங்களுக்கு மேக்கப் போட்டவர் அப்பா. தமிழில் எம்.ஜி.ஆர். என்றால் தெலுங்கில் என்.டி.ராமாராவ். அப்பா போட்ட கிருஷ்ணர் மேக்கப்பை பார்த்து ஆந்திர மக்கள் தியேட்டரில் சூடம் ஏற்றியதெல்லாம் வரலாறு.

என்.டி.ஆரை வைத்து தெலுங்கில் அப்பா தயாரித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். இந்த நேரத்தில் 1973-74 வாக்கில் கிருஷ்ணம் ராஜூ என்ற நடிகரை வைத்து ‘ஹாரதி' என்ற தெலுங்குப் படத்தை தயாரித்தார் என் சித்தப்பா.

அந்தப் படத்தை பார்த்துவிட்டு “நல்லா வந்துருக்குப் படத்தை வித்துடாதே. நாமளே ரிலீஸ் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டார் அப்பா.

நல்ல விலைக்கு வந்தும் அவர்கள் படத்தை விற்காமல் சொந்தமாக ரிலீஸ் செய்தனர். படம் படுதோல்வி. பெரிய அடி. நிறைய கடனாகி விட்டது. பணத்தை திருப்பிக் கொடுங்கனு ஃபைனான்ஷியர்ஸ் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

பெரிய தொகை. திருப்பிக் கொடுக்க இவங்ககிட்ட பணம் கிடையாது. அதனால அப்பாவும் சித்தாப்பாவும் சேர்ந்து முடிவு செஞ்சு கோபாலபுரத்துல நாங்க இருந்த வீட்டை எழுதிக் கொடுத்துட்டாங்க.

அப்புறமா மேக்கப் போட்டு வட்டி கட்டிக்கிட்டே இருக்காரு. அது முடியுற மாதிரி இல்ல. சம்பாதிக்குற பணமெல்லாம் வட்டிக்கே சரியா போயிடுது.

நாங்கெல்லாம் ஸ்கூல், காலேஜ் படிக்கிற டைம். கூட்டுக் குடும்பமான எங்க வீட்டுல கிட்டத்தட்ட 40 பேர் இருப்போம். பசங்க மட்டுமே 10 பேர் இருப்போம். வீட்டுல சாப்பாடு எப்பவும் ‘ரிச்'சா இருக்கும். விதவிதமா, வகைவகையா சாப்பிட்டு பழக்கப்பட்டுட்டோம்.

அப்பா கடன்ல கஷ்டப்பட்டுட்டு இருந்த நேரத்துல, வீட்டுல சாப்பாடு மெனு மாறத் தொடங்கியது. திடீர்னு நான்வெஜ் கட் ஆகுது. ரெண்டு மூணு ஐட்டம் இருக்குற இடத்துல ஒரே ஒரு பொறியல் மட்டும் வருது.

என்னடானு விசாரிச்சா... அப்பா கடன்ல இருக்குறதும், வட்டி கட்டுறதும் தெரிய வந்துச்சு. சித்தப்பா எம்.சி.சேகர் பெரிய கேமராமேன். அப்பாவும் அவரும் பல படங்கள்ல வேலை பார்த்து சம்பாதிக்குற பணமெல்லாம் வட்டிக்கே சரியா போகுது.

இந்த நேரத்துல ஒரு நாள் எம்.ஜி.ஆருக்கு அப்பா மேக்கப் போட்டுகிட்டு இருக்கார். அறையில பின் டிராப் சைலன்ஸ். மேக்கப் போடும்போது அப்பா ஒரு வார்த்தை பேச மாட்டார். சீரியஸா வேலை நடக்குது.

எம்.ஜி.ஆரோ தன் விரலால் அப்பப்ப மூக்கை உரசிக்கிட்டே இருந்திருக்கார். அவர் கோபமா இருந்தால் தான் அப்படி மூக்கை உரசுவார் என்று அப்பாவுக்கு தெரியும்.

ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். திடீர்னு அப்பா கையை பிடித்தாராம் தலைவர். “என்னண்ணே...?” என்றிருக்கிறார்.

“ஏன் எனக்குச் சொல்லல...” என்றாராம் தலைவர்.

“என்ன சொல்லல?” என்று எதுவுமே நடக்காதது போல கேட்டிருக்கிறார் அப்பா.

“அப்ப... நான் கேட்குறது என்னன்னு உனக்கு தெரியாதா?” என்றாராம் எம்.ஜி.ஆர்.

அவருக்கு விஷயம் போயிடுச்சுனு அப்பாவுக்கு ஷாக்.

“வீட்டை அடமானம் வச்சுருக்கீங்கனு யாரோ சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா? எப்படி நஷ்டமாச்சு. எவ்வளவு கடன் இருக்கு” என்று கேட்டிருக்கிறார்.

அன்றைய தேதிக்கு 3 லட்சம் என்பது பெரிய தொகை. உடனே உதவியாளர் குஞ்சப்பன் சாரை உள்ளே கூப்பிட்டு, “உடனே ஒரு படம் ஆரம்பிக்கணும்” என்று சொல்லிவிட்டார்.

'காந்தி புட்டின தேசம்' என்ற தெலுங்கு படத்தின் உரிமையை வாங்கி தமிழில் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. படத்துக்கு பூஜையும் போடப்பட்டது. அன்றைக்கே எல்லா ஏரியாவும் விற்றுவிட்டது.

ஒவ்வொரு ஏரியா டிஸ்ட்ரிபியூட்டரா நைட் வீட்டுக்கு தேடி வந்து பணம் கொடுத்துட்டு போறாங்க. அப்பாவுக்கு ஒன்ணுமே புரியல.

உடனே தலைவருக்கு போன் போட்டு, “என்னண்ணே... நான் இன்னும் ஒன்ணுமே ஆரம்பிக்கல. உங்களுக்கு ஒன்ணும் தரல. ஆனா எல்லாரும் தேடி வந்து பணம் கொடுத்துட்டு போறாங்க. என்ன பண்றதுண்ணே” என்றார்.

“முதல்ல வீட்டை எடு. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்” என்றார் தலைவர்.

அடுத்த நாளே வீடு மீட்கப்பட்டது.

அப்புறம் கதை டிஸ்கஷன் நடந்து ஷூட்டிங் ஆரம்பிக்கப் போற நேரத்துல இன்னொருத்தர் பயங்கரமா கோவிச்சுக்கிட்டார். அவர் என்.டி.ராமாராவ்.

“இத்தனை வருஷமா எனக்கு மேக்கப் போடுறீங்க. கிருஷ்ணரா, ராமரா என்னை மாத்திக் காட்டினவர் நீங்க. உங்களுக்கு ஒரு உதவினு வரும்போது நான் செய்யாம, எம்.ஜி.ஆர். பிரதர் செய்யுறதா... அவ்வளவு தானா எனக்கு மரியாதை” என்று அவர் கேட்டதும் அப்பா உறைந்து போய் நின்றுவிட்டார்.

தன்னோட மேக்கப் மேனுக்கு ஒரு சிக்கல் என்றதும் இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு உதவிக்கு வருவதைப் பார்த்து அவர் கண்கள் கலங்கிவிட்டன.

சத்யா ஸ்டூடியோவில் இருந்த தலைவரிடம் சென்று நடந்ததை சொல்லி இருக்கிறார். அதைக்கேட்டு சத்தம் போட்டு சிரித்தாராம்.

“இப்ப நான் என்ன பண்றது?” என்று கேட்டதும், “சரி நீ என்.டி.ஆரை வச்சு படம் பண்ணு. நான் டைரக்டர் சேது மாதவனுக்கு ஒரு படம் பண்ணுறதா சொல்லி இருந்தேன். நம்ம படத்தோட ரைட்சை அவருக்கு கொடுத்துடு” என்று சொல்லி இருக்கிறார்.

படமே பண்ணாமல் ஒரு பெரிய கடன் சுமையில் இருந்து எங்கள் குடும்பத்தை மீட்டெடுத்த தெய்வம் தான் எம்.ஜி.ஆர்.

அதன் பிறகு 'யாதோன் கி பாரத்' இந்திப் படத்தின் உரிமையை வாங்கினார் அப்பா. அதில் என்.டி.ஆர். நடிக்க, 'அண்ணதம்முலு அனுபந்தம்' என்ற பெயரில் தெலுங்கில் பெரிய ஹிட் ஆனது.

எப்படியாவது தலைவரை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு படத்தைத் துவங்கினார் அப்பா. படத்தின் பெயர் 'கொடுத்து சிவந்த கரங்கள்'.

நிறைய ரைட்டர்ஸ்லாம் கூப்பிட்டு தீவிரமா டிஸ்கஷன் போயிட்டு இருந்த டைம். அப்ப தான் திண்டுக்கல்ல மாயத்தேவர் ஜெயிச்சார்.

அப்பா மெதுவா தலைவர்கிட்ட கேட்குறாரு, “ஏண்ணே... நீங்க அரசியலுக்கு போய் என்னவாகப் போறீங்க. நீங்க முதல்வர் ஆகிட்டா நாங்கலாம் என்ன பண்றது?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு தலைவர், “யோவ்... நான் என்னத்தை முடிவு பண்றது. பார்க்கலாம். எல்லாத்துக்கும் கடவுள் ஒரு வழி வச்சிருப்பாரு” என்று சொல்லி இருக்கிறார்.

1977ல் எம்.ஜி.ஆர் முதல்வராக அமர்ந்துவிட்டார். அதனால், இறுதிவரை அவரை வைத்து அப்பாவால் படம் தயாரிக்க முடியாமலே போனது.

எம்.ஜி.ஆர். முதல்வர் ஆன பிறகு என்.டி.ஆருக்கு மட்டும் மேக்கப் போட்டார். அவரும் 1980ல் ஆந்திர முதல்வர் ஆகிவிட்டார். என்.டி.ஆர். முதல்வரானதற்கும் எம்.ஜி.ஆர். தான் காரணம்.

“நீங்க இன்னும் எவ்வளவு நாள் தான் நடிச்சுகிட்டே இருப்பீங்க. கூட்டத்தைப் பார்க்காமல் உங்களால் இருக்க முடியுமா? நீங்க ஏன் ஆந்திராவுல ஒரு கட்சி ஆரம்பிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் அப்படித் தானே நாங்கள் ஆட்சியைப் பிடித்தோம்” என்றெல்லாம் அவரிடம் தொடர்ந்து பேசியதன் விளைவாகத் தான் என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தார்.

என்.டி.ஆர் முதல்வர் ஆனதும் என்னையும், என் அண்ணன், தம்பி எல்லோரையும் ஒரு நாள் அழைத்தார் அப்பா.

“டேய்... நான் இனிமே மேக்கப் போடுறதை விட்டுறலாம்னு இருக்கேன்” என்றார்.

எங்களுக்கெல்லாம் பயங்கர ஷாக். 50 வயதில் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்று புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

“ரெண்டு பேருமே முதல்வர் ஆகிட்டாங்க. அந்த முகங்களைத் தொட்ட இந்தக் கரம் வேறு முகங்களைத் தொடாது” என்றார். அன்றுடன் அவர் வேறு யாருக்கும் மேக்கப் போடவில்லை.

இப்படி தன் அப்பா பீதாம்பரத்தைப் பற்றிப் பெருமையாக சொன்னார் டைரக்டர் வாசு,
 - பிரசாந்த்! 
 

Leave a comment

Comment