அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் குடியேற்றவாசிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புள்ளிவிவரங்கள் நேற்று (20) வெளியிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2025 ஜனவரி மாதம் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமானது முதல், இரத்து செய்யப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 75 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக, கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், அண்மைய வாரங்களில் விசா இரத்துச் செய்யப்படும் வேகம் மேலும் அதிகரித்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டத்தை மீறுதல், மோசடிகளில் ஈடுபடுதல் அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் வகையில் விசா பெற்று அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு எதிராகத் தமது நிர்வாகம் எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிகாட் தெரிவித்துள்ளார்.
எனினும், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள் மனித உரிமைகள் அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


