தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட நேர்மறை மற்றும் எதிர்மறையான மாற்றங்கள் குறித்து பேசியுள்ள கவுரி கிஷன், புகழால் கிடைத்த மகிழ்ச்சியையும், அதனால் இழந்த தனிப்பட்ட சுதந்திரத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘96’ படத்தில் வரும் ஜானுவை விரும்பும் பலரும் என்னிடம் மிகுந்த பாசத்துடன் பேசுகிறார்கள். இதை என் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியமாகவே பார்க்கிறேன். நான் ஒருநாள் நடிகையாவேன் என்றுகூட நினைத்துப் பார்த்ததில்லை. புகழை விரும்பியவளும் இல்லை.
ஆனால், நடிகையான பிறகு எனது தனிப்பட்ட சுதந்திரம் குறைந்துவிட்டது. நண்பர்களுடன் வெளியே சென்று ஜாலியாகப் பானிபூரி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், முன்புபோலச் சுதந்திரமாகச் செல்ல முடிவதில்லை. நிஜ வாழ்க்கையில் நான் மிகவும் நிதானமானவள். நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதையே அதிகம் விரும்புகிறேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


