TamilsGuide

ஆல்பர்ட்டா மாகாண வாக்கெடுப்பு - 43.1% வாக்குகள் முன்பதிவு மற்றும் தபால் மூலம் பதிவு

இன்றைய தினம் நடைபெறவுள்ள ஆல்பர்ட்டா மாகாண வாக்கெடுப்பிற்கு தகுதியுள்ள வாக்காளர்களில் 43.1 சதவீதம் பேர் ஏற்கனவே முன்கூட்டிய வாக்குப்பதிவு அல்லது தபால் வாக்குகள் மூலம் வாக்களித்துள்ளதாக 'எலக்ஷன்ஸ் ஆல்பர்ட்டா' அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி, 8,37,791 ஆல்பர்ட்டா மக்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். இதில் சனிக்கிழமை (முன்கூட்டிய வாக்குப்பதிவின் இறுதி நாள்) மட்டும் 1,33,967 வாக்குகள் பதிவாகியுள்ளன.

முந்தைய நான்கு நாட்களுடன் ஒப்பிடும்போது இறுதி நாளின் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை 1,74,532 வாக்குகளும், புதன்கிழமை 1,86,742 வாக்குகளும், வியாழக்கிழமை 1,68,230 வாக்குகளும், வெள்ளிக்கிழமை 1,74,320 வாக்குகளும் பதிவாகியிருந்தன. மேலும், 5,19,082 சிறப்புத் தபால் வாக்குகளும் பெறப்பட்டுள்ளதாக 'எலக்ஷன்ஸ் ஆல்பர்ட்டா' தெரிவித்துள்ளது. இதன்படி, மொத்தம் 13,56,873 வாக்குகள் முன்கூட்டியே பதிவாகியுள்ளன.

இது மாகாணத்தின் மொத்த தகுதியுள்ள 31,48,343 வாக்காளர்களில் 43.1 சதவீதமாகும். இதனுடன் ஒப்பிடுகையில், 2023 மாகாணத் தேர்தலின் போது 29,39,762 தகுதியுள்ள வாக்காளர்களில் 8,09,988 பேர் மட்டுமே முன்கூட்டியே அல்லது தபால் மூலம் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய ஆல்பர்ட்டா பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, சனிக்கிழமை 'டூ ஹில்ஸ்' பகுதியில் பிற்பகல் 2:20 மணிக்கு வாக்குப்பதிவு மையம் மூடப்பட்டு, வாக்காளர்கள் 'வெக்ரெவில்லி' பகுதிக்கு திருப்பி விடப்பட்டனர்.

தற்காலிக மூடல் காரணமாக ஏற்பட்ட நேர இழப்பை ஈடுகட்ட, ஸ்மோக்கி லேக், கேம்ரோஸ், லேடக், ஷெர்வுட் பார்க், ஸ்ட்ராட்கோனா, ஃபோர்ட் சாஸ்காட்செவன், வெடாஸ்கிவின் மற்றும் டிரேட்டன் உள்ளிட்ட மத்திய ஆல்பர்ட்டாவின் பல இடங்களில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

இன்றயை தினம் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடையும். வாக்காளர்கள் வசதிக்கேற்ப நாளின் தொடக்கத்திலேயே வந்து வாக்களிக்குமாறு 'எலக்ஷன்ஸ் ஆல்பர்ட்டா' கேட்டுக்கொண்டுள்ளது. 

Leave a comment

Comment