கொழும்பு துறைமுகத்தில் அமையவிருந்த 392 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ‘தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாடங்கள் மைய’ (SACLH) திட்டத்திலிருந்து 'சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்' நிறுவனம் விலகியுள்ளது.
தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாட மையம் (SACLH) திட்டம் கைவிடப்பட்டதை ஹொங்கொங் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், சீனத் துறைமுக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை பிராந்திய தளவாட மையமாக உயர்த்த திட்டமிடப்பட்டிருந்த ஒரு முக்கிய வெளிநாட்டு முதலீடு இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து, 21.9 மில்லியன் டொலர் தொகையை 30 நாட்களுக்குள் இழப்பீடாக வழங்க இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த தொகை மற்றும் எஞ்சியுள்ள ரொக்கப் பணம் ஆகியவை பங்குதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் நிறுவனம் 70வீத பங்குகளையும், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் எக்சஸ் என்ஜினீயரிங் (Access Engineering PLC) நிறுவனங்கள் தலா 15% பங்குகளையும் கொண்டிருந்தன.
வெளிப்புறச் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம், நிலம் மற்றும் சட்டரீதியான சிக்கல்கள், வர்த்தக ரீதியான பரிசீலனைகள் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 50 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் 5 மாடி கட்டிடமாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு, புதிய முதலீட்டு முன்மொழிவுகளை கோர, துறைமுக அதிகார சபை முடிவு செய்துள்ளது.


