TamilsGuide

கொழும்பில் குழப்பத்தை ஏற்படுத்திய தேரரின் ஏமாற்று நாடகம் அம்பலம்

கொழும்பில் குற்றவாளி கலபொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு மணித்தியாலத்தில் வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்ட களத்தில் பொருஸாருடன் இடம்பெற்ற முறுகல் நிலையின் போது, பலங்கொட கஸ்ஸப தேரர் மீது பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எனினும் அப்படியொரு தாக்குதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என பொலிஸார் மறுத்திருந்தனர்.

பரபரப்பான நிலையை அடுத்து நோயாளர் காவு வண்டி ஊடாக தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இரவு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் சிகிச்சை தேவையில்லை எனக் கூறி அங்கிருந்து வெளியேறி சென்றதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்தார்.

இதன்மூலம் மக்களை திசை திருப்பும் வகையில், ஆர்ப்பாட்டக்குழு திட்டமிட்ட வகையில் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த 17ஆம் திகதி சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது தான் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூஜிய பலங்கொட கஸ்ஸப தேரர் மீண்டும் போராட்டத்தில் இணைந்துள்ளார்.

Leave a comment

Comment