• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஞானசார தேரர் விவகாரம் - நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தலையிடாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடப்போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பதுளையில் இன்று (18) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பேரணியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, நீதித்துறையின் இறுதித் தீர்மானங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும், அவற்றை மாற்றியமைக்க நிறைவேற்றுத்துறையிடம் இருந்து எவரும் எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது உரையில் கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயரைக் குறிப்பிட்டு நேரடியாகப் பேசவில்லை. 

எனினும், தேரரின் சிறைத்தண்டனை மற்றும் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பான சர்ச்சையின் பின்னணியில் அவரது கருத்துகள் வெளியாகியுள்ளன.

சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொலிஸார், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்கள் விசாரணைகள் மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், சட்டத்தை விளக்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இறுதி அதிகாரம் நீதித்துறைக்கே, குறிப்பாக உச்ச நீதிமன்றத்திற்கே இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் கட்டுப்பட்டு நடக்கும் என்றும், அதற்கு அப்பால் அரசாங்கத்திடமிருந்து வேறு தீர்மானங்களை எவரும் எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது எனத் தெரிவித்து, கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி உயர் நீதிமன்றம் அதனைச் செல்லுபடியற்றதாக்கியது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு ஒக்டோபர் 5 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பல பௌத்த பிக்குகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குரல் எழுப்பி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கொழும்பில் பௌத்த பிக்குகள் பங்கேற்ற போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தற்போதைய கருத்துகள், இந்த விவகாரத்தில் அவர் தலையிட விரும்பவில்லை என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகின்றன. 

இருப்பினும், ஞானசார தேரருக்கு புதிதாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படாது என அவர் நேரடியாக அறிவிக்கவில்லை.

சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தும் நாடொன்றை உருவாக்குவது, எதிர்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply