TamilsGuide

சீனாவில் நடந்த திருமணம் - மணமகன் பெயரும் ஜூ சியாசோங்.. மணமகள் பெயரும் ஜூ சியாசோங்!

கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற்றது. மணமகன், மணமகள் இருவருக்குமே 'ஜூ சியாசோங்' என்பதுதான் பெயர்.

இங்கு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இவர்களது வயது மட்டுமே வித்தியாசம் (மணமகனுக்கு 33 வயது, மணமகளுக்கு 28 வயது). ஆனால், சீன மொழியில் இவர்களது பெயரை எழுதும் எழுத்துக்கள் கூட துளி அளவும் மாறாமல் அப்படியே அச்சடித்தாற்போல் ஒன்றாக இருப்பதுதான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இவர்களது திருமண வரவேற்பு போஸ்டர்களில் சமூக ஊடகங்களில் வெளியான போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இரு இடங்களிலுமே ஒரே பெயர் எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து மணமகள் கூறுகையில், "மணமகனைப் பற்றி முன்கூட்டியே தெரியாத எனது தூரத்து உறவினர்கள் சிலர், திருமண ஏற்பாட்டாளர்கள் ஏதோ தவறுதலாக மணமகளின் பெயரையே மணமகன் இடத்திலும் அச்சிட்டு விட்டார்கள் என்று நினைத்துக் குழம்பினார்கள்," எனச் சிரித்துக்கொண்டே பகிர்ந்துள்ளார்.

இந்தப் தம்பதியரிடையே உள்ள ஒற்றுமை பெயருடன் மட்டும் நின்றுவிடவில்லை. இவர்கள் இருவருமே சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ஒன்றாகப் பணியாற்றி வருகின்றனர்.

ஒரே துறையில் வேலை செய்வது மற்றும் ஒரே பெயரைக் கொண்டிருப்பது இவர்களது காதலை மேலும் சுவாரசியமாக்கியுள்ளது.

இவர்களது அரிய தற்செயல் நிகழ்வு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது.

"இவர்கள் இருவரும் ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப்பட்டவர்கள் என்பதற்கு இதுவே சாட்சி" என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில குறும்புக்கார இணையவாசிகள், "உங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு 'சாங் சாங்' என்று பெயரிடுங்கள், அது உங்கள் இருவரின் பெயரையும் குறிக்கும்" என்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

பெயரால் சில நடைமுறை குழப்பங்கள் ஏற்பட்டாலும், அந்த ஒரு குட்டி ஒற்றுமையே இவர்களது திருமண வாழ்க்கையை உலகறியச் செய்த மாபெரும் காதல் கதையாக மாற்றியுள்ளது.
 

Leave a comment

Comment