TamilsGuide

ஹார்முஸ் ஜலசந்தியில் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - ஐபோன்களையும் வாசனைத் திரவியங்களையும் அள்ளி சென்ற ஈரானிய மீனவர்கள்

ஈரானின் வளைகுடா கடற்கரைப் பகுதியான ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் கடந்த 14ஆம் தேதி அன்று சிங்கப்பூர் கொடியுடன் இயங்கிய 'ஜிஎஃப்எஸ் ப்ரைடு' என்ற மாபெரும் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இந்த விபத்தின் காரணமாக இக்கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த பொருள்கள் கடலில் மிதந்தன.

இதையறிந்த அப்பகுதி மீனவர்களும் உள்ளூர் மக்களும் சிறிய மீன்பிடிப் படகுகளில் உடனடியாகக் கடலுக்குள் விரைந்து சென்று, நீரில் மிதந்த புத்தம் புதிய ஐபோன்கள், பிரெஞ்சு வாசனைத் திரவியங்கள் மற்றும் பல நுகர்வோர் பொருட்களை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் மற்றும் பரபரப்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ காட்சிகளின்படி, நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்களது சிறிய படகுகளில் கடல் அலைகளையும் பொருட்படுத்தாமல் பாதியளவு நீரில் மூழ்கியிருந்த சரக்குக் கண்டெய்னர்களுக்கு இடையே ஊடுருவிச் சென்றுள்ளனர். கடலில் தத்தளித்த பெட்டிகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் மீட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, ஒரு சிறிய மீன்பிடிப் படகு முழு அளவிலான பெரிய சரக்குக் கண்டெய்னர் ஒன்றை மிகுந்த சிரமத்துடன் கயிரிட்டுக் கட்டி இழுத்துச் செல்ல முயன்ற காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது. "நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்; ஒரு கன்டெய்னர் கப்பல் மூழ்கிவிட்டதாகத் தகவல் கிடைத்ததால் ஐபோன்களையும் வாசனைத் திரவியங்களையும் சேகரிக்கப் புறப்பட்டுள்ளோம்" என்று அந்தப் பகுதி மீனவர் ஒருவர் வீடியோவில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் கடல்சார் துறை மற்றும் துறைமுக ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த விபத்து நேரிடுவதற்கு முன்பு கப்பலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதுடன், அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது பொருள் தாக்கியதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கப்பலில் பயணம் செய்த 21 மாலுமிகளும் உடனடியாகப் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை தரப்பில் வேறுபட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட சரக்குக் கப்பல் பாதுகாப்பற்ற மற்றும் தடைசெய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட வழித்தடத்திற்குள் நுழைந்ததால், அங்கு ஏற்கனவே கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடியில் மோதி விபத்துக்குள்ளானதாக அவர்கள் தெரிவித்தனர்.

2,500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் சென்று கொண்டிருந்த இந்த ஜிஎஃப்எஸ் ப்ரைடு கப்பல் விபத்துக்குள்ளானது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக தாறுமாறாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த அசாதாரண சூழலில் மீனவர்கள் நிவாரணப் பொருட்களைப் போல கடலில் மிதக்கும் பொருட்களை அள்ளிச் செல்வது ஒருபுறம் வேடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் சர்வதேச வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. ஈரானிய ராணுவ தரப்பு இப்பகுதியில் செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு வழித்தடங்களைப் பின்பற்றுமாறும் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment