TamilsGuide

அமெரிக்கத் தேர்தலில் கனடா தலையிட்டதா

எதிர்வரும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் கனடா தலையிடுவதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை கனடாவின் முன்னாள் தூதரான கொலின் ராபர்ட்சன் வெறும் "வீண் சலசலப்பு" என குறிப்பிட்டுள்ளார்.

"இதற்குப் பெரிய அளவில் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா, அண்மைய நேர்காணல் ஒன்றில் கனடிய அரசியல்வாதிகளின் சில நடவடிக்கைகள் நவம்பர் 3-ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் தலையிடுவதற்குச் சமமாக அமையக்கூடும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்டாரியோ மாகாண முதலமைச்சர் டக் ஃபோர்ட்  கடந்த ஆண்டு வெளியிட்ட விளம்பரம் ஒன்றில், முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் சுதந்திர வர்த்தகம் குறித்துப் பேசிய காணொலியைப் பயன்படுத்தியதை ஹோக்ஸ்ட்ரா சுட்டிக்காட்டினார்.

மேலும், அமெரிக்காவின் வரிகளுக்குப் பதிலடியாகக் கனடா விதித்த எதிர்ப்புக் கட்டணங்கள் குறிப்பிட்ட அமெரிக்க மாநிலங்களைக் குறிவைத்து அமைக்கப்பட்டதாக கனடாவின் தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறியதையும் அவர் விமர்சித்தார்.

இதற்குப் பதிலளித்த கொலின் ராபர்ட்சன், ஒன்டாரியோ முதலமைச்சரின் செயல் தேர்தல் தலையீடு அல்ல, அது கனடாவின் நலனுக்கான ஆதரவுத் திரட்டல் மட்டுமே எனக் கூறினார்.

மேலும், அமெரிக்க வரிகளுக்கு எதிராகக் கனடா எடுத்த நடவடிக்கை சர்வதேச வர்த்தகச் சட்டத்தின்படி முற்றிலும் நியாயமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"கனடிய அரசியல்வாதிகள் அமெரிக்க வணிக நிறுவனங்களை ஊக்குவித்து, வர்த்தகப் போருக்கு எதிராகப் பேச வைத்து வருகின்றனர்.

இப்போது குடியரசுத் கட்சியின் வேட்பாளர்களே அதிபரின் முடிவிலிருந்து விலகி, வரிகளை விதிக்கக் கூடாது என்று பேசி வருகின்றனர். அமெரிக்கர்கள் அமெரிக்கர்களிடம் பேசுவதையே நாம் எதிர்பார்க்கிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.  
 

Leave a comment

Comment