TamilsGuide

லூர்து மேரி ராஜேஸ்வரி!

அப்படிச் சொன்னால் சட்டென்று தெரியாது, ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி என்றால் அடுத்த கணம், தனித்துவமான ஓர் இசைக்குரல் ரசிக உள்ளங்களில் ஒலிக்கத் தொடங்கிவிடும். மேடையில் அவ்வளவு எளிதில் 'போலப் பாடுதல்' செய்ய முடியாத வித்தியாசமான வளமும் வசீகரமும் நிறைந்த குரல் அவருடையது.

குழுப் பாடல்களை இசைத்துக்கொண்டிருந்த தமது அன்னையோடு பாடல்பதிவுகளுக்குச் சென்றுகொண்டிருந்தவர், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனால் அடையாளம் காணப்பட்டு, பாடல்கள் வளர்த்த பயணத்தில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் ‘பாச மல’ரின் 'வாராய் என் தோழி வாராயோ' எனும் அசத்தலான பாடலுக்குப் பின் அதிகம் பேசப்பட்டார்.

‘கறுப்புப் பணம்’ படத்தில் இடம்பெற்ற 'ஆடவரெல்லாம் ஆட வரலாம்' பாடல் அவரது குரலின் வேறொரு வலுவைக் காட்டியது. பின்னாளில் கேபரே வகை நடனத்துக்கான பாடல்கள் என்றாலே ஈஸ்வரிதான் என்றாயிற்று. ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ (வல்லவன் ஒருவன்), ‘அதிசய உலகம்’ (கௌரவம்) என்று போகும் வரிசையில் அவருடைய குரல்களில் இழையும் பரவசமும், கொண்டாட்டமும் புதிதான இழைகளில் நெய்யப்பட்டிருக்கும். 'குடி மகனே' (வசந்த மாளிகை) பாடலில் ‘கடலென்ன ஆழமோ..கருவிழி ஆழமோ..’ என்ற ஏற்ற இறக்கங்களும் சேர, கொஞ்சுதலும் கெஞ்சுதலும் சொற்களில் போதையூட்டும் வண்ணம் குழைத்தலுமாக உயிர்த்தெழும் குரல் அது.

பி. பி. ஸ்ரீனிவாஸ் குரலுக்கேற்ப எத்தனை எத்தனை பாடல்கள் ( ‘ராஜ ராஜ ஸ்ரீ’, ‘கண்ணிரண்டும் மின்ன மின்ன’, ‘சந்திப்போமா இனி சந்திப்போமா..’). சந்திரபாபுவோடு இணைந்து 'பொறந்தாலும் ஆம்பளையா' (போலீஸ்காரன் மகள்) பாடலின் சேட்டைகள், எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மயக்கக் குரலோடு சேர்ந்த பாடல்கள்தான் ( ‘மறந்தே போச்சு’, ‘அநங்கன் அங்கஜன்’, ‘ஆரம்பம் இன்றே ஆகட்டும்’, ‘கல்யாணம் கச்சேரி’ ) எத்தனை! பி. சுசீலாவோடு இணைந்து இசைத்த அக்காலப் பாடல்கள் ( ‘கட்டோடு குழலாட’ - பெரிய இடத்துப் பெண், ‘அடி போடி’ - தாமரை நெஞ்சம், ‘தூது செல்ல’ - பச்சை விளக்கு, ‘உனது மலர்க்கொடியிலே’ - பாத காணிக்கை, ‘மலருக்குத் தென்றல்’ - எங்க வீட்டுப் பிள்ளை, ‘கடவுள் தந்த’ - இருமலர்கள்). இவை தோழியரது வெவ்வேறு மனநிலையின் பிரதிபலிப்புகளைக் கச்சிதமாக வார்த்த பாடல்களில் சில. டி. எம். சவுந்திரராஜன் - எல். ஆர். ஈஸ்வரி இணை குரல்கள், பல்வேறு ரசங்களைப் பருகத் தந்தவை.

ஒரு கட்டத்தில் இறையுணர்வுத் தனிப்பாடல்களில் வேகமாக ஒலிக்கத் தொடங்கிய அவரது குரலில் பதிவான கற்பூர நாயகியேவும், மாரியம்மாவும், செல்லாத்தாவும் இப்போதும் எண்ணற்ற சாதாரண மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த பாடல்களாகத் திகழ்கின்றன. கடவுள் நம்பிக்கை அற்றோரையும் ஈர்க்கும் இவ்வகைப் பாடல்கள், மத வெறிக்கு அப்பாற்பட்டது இந்த மண், இந்த மக்கள் என்ற இயல்பைத் திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொண்டிருப்பவை. அதற்காகத் தான் ‘எல்லார் ஈஸ்வரி’ என்று பொதுவான பெயரிட்டார்கள் என்று ஒருமுறை அவரே சொன்னதாகப் படித்த நினைவு.

முறைப்படியான சங்கீதப் பயிற்சி இல்லாமலே மகத்தான இசையைச் சலிக்காத குரலில் சளைக்காமல் வழங்கி இருக்கும் ஈஸ்வரி எல்லாக் காலங்களுக்குமானவர்.

- பிரசாந்த்! 

Leave a comment

Comment