TamilsGuide

இந்தியாவில் நடைபெற்ற முதலாவது BIMSTEC கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை

இந்தியாவின் புதுடில்லியில் நேற்று(14) புதன்கிழமை நடைபெற்ற முதலாவது BIMSTEC உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்கேற்றார்.

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பான BIMSTEC இன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தை, இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

மாறிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வங்காள விரிகுடா பிராந்தியத்தைப் பாதுகாப்பானதாகவும், அச்சுறுத்தல்களைத் தாங்கி மீண்டெழும் திறன் கொண்டதாகவும் மாற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பிராந்திய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுப்பு நாடுகளின் பொதுவான உறுதிப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது கூட்டத்தை ஏற்பாடு செய்து, பொதுவான பாதுகாப்பு இலக்குகளை முன்னெடுப்பதற்காகப் பிராந்திய நாடுகளை ஒன்றிணைத்தமைக்காக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் அமைச்சர் ஆனந்த விஜேபால நன்றி தெரிவித்தார்.

BIMSTEC அமைப்பில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

Leave a comment

Comment