TamilsGuide

Flydubai சம்பவம்; 31 நாடுகளுக்கு இஸ்ரேல் புதிய கட்டுப்பாடு - ஏர் பிரான்ஸ் எடுத்த முடிவு

Flydubai நிறுவனத்தின் விமானத்தில் ஓமான் துணை விமானி ஒருவர், இந்திய விமானி மீது தாக்குதல் நடத்தி விமானத்தைக் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ஆபத்தான சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஈரான், ஓமன் உள்ளிட்ட 31 நாடுகளின் குடியுரிமை அல்லது இரட்டை குடியுரிமை கொண்ட விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் இஸ்ரேலிய வான்வெளியில் பயணிக்கக் கூடாது என இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

புவியியல் காண் இஸ்ரேலின் இந்த புதிய பாதுகாப்பு விதிகளுக்குக் கட்டுப்பட்டு, தங்களது டெல் அவிவ் (Tel Aviv) விமானங்களில் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த விமான ஊழியர்களைப் பணியமர்த்துவதைத் தவிர்ப்பதாக பிரான்ஸின் ஏர் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சேவை வழங்கும் நாட்டின் உள்ளூர் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்பத் தங்களது ஊழியர் பட்டியலை மாற்றி அமைப்பது வழக்கமான ஒன்றுதான் என ஏர் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் செக் குடியரசின் ஸ்மார்ட்விங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இஸ்ரேலின் இந்த நிபந்தனைகளுக்கு இணங்க ஒப்புக்கொண்டுள்ளன.

எனினும், ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவுக்குப் பிரெஞ்சு விமானிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இது தேசிய இனத்தின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடு என்றும் விமர்சித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளால் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களின் பணி அட்டவணைகளை அமைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான சட்டப்பூர்வ விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.   
 

Leave a comment

Comment