'கஹோ நா பியார் ஹை' படம் தந்த ஈர்ப்பு
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் மாரிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண குருப். இவர் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியாற்றி வந்ததால், தனது மனைவி பாலமணி மற்றும் 3 பிள்ளைகளுடன் அங்கேயே குடியேறினார். இவர்களது மகள்தான் பீஜா (52). மகாராஷ்டிராவிலேயே வளர்ந்ததால் இவருக்கு இந்தி மொழி அசாத்தியமாகப் பேச வரும்.
பீஜாவுக்கு 3 வயதாக இருக்கும் போதே பெருமூளை வாத நோய் தாக்கியது. வயது கூடக் கூட நோயின் வீரியம் அதிகரித்ததால், ஒன்பதாம் வகுப்புக்கு மேல் அவரால் படிக்க முடியவில்லை. தனது 19 வயது வரை புனேயில் இருந்த பீஜா, அதன்பின் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு தாயின் பராமரிப்பில் பூர்வீக வீட்டிலேயே முடங்கி வாழ்ந்து வந்தார்.
சிறு வயது முதலே இந்திப் படங்களின் ரசிகையான பீஜா, கடந்த 2000-ஆம் ஆண்டில் ஹிருத்திக் ரோஷன் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான 'கஹோ நா பியார் ஹை' (Kaho Naa... Pyaar Hai) திரைப்படத்தைப் பார்த்தார்.
அதில் ஹிருத்திக் ரோஷனின் நடனம் மற்றும் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, அவரது தீவிர ரசிகையாக மாறினார். எப்படியாவது அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது பீஜாவின் 26 ஆண்டு கால லட்சியமாக மாறியது.
உடல்நலக் குறைவால் அவதிப்படும் அக்காவின் ஆசையை நிறைவேற்ற அவரது தம்பி ஷியாம் பல முயற்சிகளை எடுத்து வந்தார். மும்பையில் விஸ்மயா மேக்ஸ் ஸ்டூடியோவின் இயக்குநராக இருக்கும் ஷியாம், சமீபத்தில் இஸ்ரேல் சென்றிருந்த போது தற்செயலாக நடிகர் ஹிருத்திக் ரோஷனின் மேலாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரிடம் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது அக்கா பீஜாவின் கதையையும், ஹிருத்திக் ரோஷனைப் பார்க்கத் துடிக்கும் அவரது 26 ஆண்டு காலக் கனவையும் உருக்கமாக எடுத்துரைத்தார்.
இந்தத் தகவல் உடனே நடிகர் ஹிருத்திக் ரோஷனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. கதையைக் கேட்டு உருகிய ஹிருத்திக், உடனடியாக பீஜாவைச் சந்திக்கச் சம்மதம் தெரிவித்தார்.
தற்போது 52 வயதாகும் பீஜாவால் தெளிவாகப் பேசவோ, தலையை நிமிர்த்தி வைக்கவோ, பிறர் உதவியின்றி அமரவோ முடியாது. இப்படிப்பட்ட கடுமையான உடல்நலக் குறைபாடுகளுக்கு இடையே பயணம் செய்வது பெரும் சவாலாக இருந்தபோதிலும், ஹிருத்திக்கைப் பார்க்கும் ஆசையில் அவர் தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் கேரளாவில் இருந்து மும்பைக்கு அழைத்து வரப்பட்டார்.
மகளின் வாழ்நாள் கனவு நிறைவேறுவதைக் காண பீஜாவின் 80 வயது முதிய தாயார் பாலமணியும் உடன் சென்றிருந்தார்.
மும்பையில் உள்ள ஹிருத்திக் ரோஷனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு அரங்கேறியது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த நெகிழ்ச்சியான சந்திப்பில், ஹிருத்திக் ரோஷன், பீஜா மற்றும் அவரது தாயாரின் அருகில் அமர்ந்து மிகவும் அன்போடு பேசினார்.
அப்போது ஹிருத்திக் பீஜாவிடம், "என்னுடைய முதல் படத்தில் உங்களுக்கு என்ன விஷயம் மிகவும் பிடித்தது?" என்று அன்போடு கேட்டார். அதற்கு பீஜா கஷ்டப்பட்டு அசைந்து அளித்த நெகிழ்ச்சியான பதில் ஹிருத்திக்கை அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் பரிசுகளைப் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக, அவர்களுடன் இணைந்து ஹிருத்திக் ரோஷன் பல புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்தார்.
'கஹோ நா பியார் ஹை' திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பீஜாவின் அண்ணன் பிஜு என்பவரும் இதே பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டுத் தனது 36-வது வயதில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தீராத நோயின் வலியையும் மறந்து, 26 ஆண்டுகள் ஒரு நடிகரின் மீது காட்டிய தூய்மையான அன்பிற்கு, அந்தப் பாலிவுட் சூப்பர் ஸ்டாரே நேரில் வந்து கௌரவித்திருப்பது இந்தியத் திரை உலகினரிடையே பெரும் நெகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.


