TamilsGuide

மக்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்த போப் லியோ

தனது புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தமக்காகப் பிரார்த்தனை செய்த நலம் விரும்பிகளுக்கு போப் 14ஆம் லியோ நன்றி தெரிவித்துள்ளார்.

71 வயதான போப் லியோ, கடந்த 11ஆம் திகதி வாடிகனில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற ஞாயிறு வழிபாட்டின்போது, தனது உடல்நிலை குறித்து அறிவித்திருந்தார்.

தனது நுரையீரலில் கட்டி உருவாகியுள்ளதாகவும், அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் இரவை அமைதியாகக் கழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது அகற்றப்பட்ட நுரையீரல் திசுப் பகுதி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கட்டியின் தன்மை மற்றும் புற்றுநோயின் தீவிரம் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்படவுள்ளன. இந்நிலையில், தமக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து போப் லியோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், இந்த நாட்களில் தம்மால் மக்களுடன் நேரடியாக இருக்க முடியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தமக்காகப் பிரார்த்தனை செய்ததற்கும், ஒன்றிணைந்து மேற்கொண்ட பணிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதும், ஒருவருக்கொருவர் அக்கறையுடன் செவிசாய்ப்பதும் முழுத் திருச்சபைக்கும் ஒரு வரமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது மகிழ்ச்சிகள், சவால்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து பகிர்ந்துகொண்ட குடும்பங்களுக்கும் அவர் விசேடமாக நன்றி தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment