சவுதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதால், உம்ரா யாத்திரைக்குச் செல்லத் திட்டமிடும் இலங்கையர்கள் அவதானத்துடன் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, சவுதி அரேபியாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எனவே, உம்ரா யாத்திரைக்குத் திட்டமிடும் பயணிகள் தங்களது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது எச்சரிக்கையுடன் செயற்படுவதுடன், தத்தமது உம்ரா குழுக்களின் பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அவசர நிலைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் மாற்றுத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் தங்களது பயணத் திட்டங்களில் உள்ளடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் 2026 ஒக்டோபர் 13 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.


