தென் கொரியாவின் புகழ்பெற்ற பிடிஎஸ் இசைக்குழுவின் முன்னணி நட்சத்திரமான ஜிமின் தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், பெரு நாட்டின் தலைநகரான லிமா நகரம் முழுவதும் ரசிகர்களின் அதீத அன்பால் ஒரு திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
பிடிஎஸ் குழுவினர் தங்கள் 'அரிராங்' உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக பெரு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அக்டோபர் 7, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் லிமாவில் உள்ள எஸ்டாடியோ சான் மார்கோஸ் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளுடன், இன்று (அக்டோபர் 13) ஜிமினின் பிறந்தநாளை பெரு நாட்டு ஆர்மி ரசிகர்கள் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடி தீர்த்துள்ளனர்.
பெரு நாட்டின் 'ஜிமின் பெரு 13' ரசிகர் மன்றம் மற்றும் லிமா மெட்ரோவின் லீனா 1 நிர்வாகம் இணைந்து அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ‘ஏ டிரைன் ஆஃப் லவ் ஃபார் ஜிமின்’ என்ற சிறப்பான திட்டத்தைத் தொடங்கின. ஜிமினின் புகைப்படங்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகள் முழுமையாக ஒட்டப்பட்ட இந்தச் சிறப்பு மெட்ரோ ரெயில், வில்லா எல் சால்வடார் முதல் பயோவார் வரை உள்ள 26 நிலையங்களைக் கடந்து சுமார் 34.6 கிலோமீட்டர் தூரம் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் ஓட்டுநர் அறையின் உள்ளே ஜிமினின் புகழ்பெற்ற 'சிம்மி' கார்ட்டூன் பொம்மையும் இடம்பெற்றுள்ளது. இது தினசரி பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
லிமா நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளின் போது ரசிகர்கள் ஜிமினுக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இன்ப அதிர்ச்சி அளித்தனர். அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 'வீ ஆர் புல்லட்ரூஃப்: தி எடர்னல்' பாடலின் போது ரசிகர்கள் திடீரென 'பிறந்தநாள் வாழ்த்து' பாடலைப் பாடினர். அதைக் கேட்டு நெகிழ்ந்த ஜிமின் ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 10 அன்று நடைபெற்ற இறுதி நாள் நிகழ்ச்சியின் நிறைவு உரையின் போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றிணைந்து 'பெலிஸ் கும்ப்லியானோஸ்' பாடலைப் பாடி வாழ்த்து தெரிவித்தனர்.
இதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட ஜிமின், ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, "உங்களை என் இதயத்தில் பாதுகாத்து வைப்பேன்"என்று உருக்கமுடன் கூறினார். மேலும், பெரு நாட்டு மக்களின் அன்பும் அரவணைப்பும் தனது வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மெட்ரோ ரெயில் சேவையைத் தாண்டி, பெரு மற்றும் கொரியாவைச் சேர்ந்த ரசிகர் மன்றங்கள் இணைந்து லிமா நகரம் முழுவதும் பல்வேறு விளம்பரப் பணிகளை மேற்கொண்டன. மைதானத்திற்கு அருகிலுள்ள பெரிய விளம்பரப் பலகைகள், எல்.இ.டி லாரிகள், மற்றும் நான்கு முக்கிய அடையாளப் பகுதிகளில் ஜிமினின் பிறந்தநாள் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. மேலும், இறுதி நாள் நிகழ்ச்சியின் போது பிடிஎஸ் குழுவின் மற்ற உறுப்பினர்களும் ஜிமினுக்கு மேடையில் வாழ்த்துத் தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.


