TamilsGuide

அக்டோபர் 16-ல் வெளியாகிறது டிரோன்ஸ்- ஹாரர், ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை கலந்த புதிய படைப்பு

ஜி. எம்.மோர்கன் தயாரிப்பில், ‘பன் பட்டர் ஜாம்’ புகழ் இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கிய வித்தியாசமான படைப்பாக வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஜி.எம்.மோர்கன் பேசுகையில் இது தனது முதல் தயாரிப்பு முயற்சி என்றும், இயக்குநர் ராகவ் மிர்தாத் கூறிய கதை தனக்குப் பிடித்துப் போனதால் உடனடியாகப் படத்தைத் தயாரிக்க முன்வந்ததாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகை சித்தி இத்னானி, பெரிய படங்களுடன் சிறிய படங்கள் வெளியாவது குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், நவராத்திரி பண்டிகைக் காலத்தில் குடும்பங்கள் கொண்டாடும் சுவாரஸ்யமாகவும் தரமாகவும் இப்படம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இப்படத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிற அரசியல் மற்றும் காதல் சார்ந்த சில தீவிரமான விஷயங்களும் பேசப்பட்டுள்ளதாகவும், வழக்கமான சினிமா பாணியை உடைக்கும் இதுபோன்ற சிறிய படங்களுக்கு மக்களின் ஆதரவு தேவை என்று நடிகை அஞ்சலி நாயர் குறிப்பிட்டார்.

நடிகர் டிராவிட் செல்வம், ஆர்.ஜே. தீபக் மற்றும் சினிமாவாலா சதீஷ் ஆகியோர் இப்படத்தில் தங்களது அனுபவங்களையும், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளையும் மேடையில் உணர்வுபூர்வமாகப் பகிர்ந்து கொண்டனர். கனவுகளில் நிகழும் விசித்திரமான சம்பவங்களை மையமாகக் கொண்டு சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. மர்மமும் மாயாஜாலமும் நிறைந்த புதிய உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment