உலகப் பெண்குழந்தைகள்
திருநாள் இன்று
வளர்பிறைகளுக்கு
வாழ்த்துக்கள்
இன்று சில வினாக்கள்
தவிர்க்கமுடியாதவை
பெண் குழந்தைகளுக்கான
அதிகாரம் முழுமையாக
வழங்கப்பட்டு விட்டதா?
பாலின சமத்துவம் என்பது
எத்துணை விழுக்காடு
நடைமுறையில் இருக்கிறது?
உயிருக்குள் உயிரைச்
சுமக்க வேண்டிய
பெண்குழந்தைகளுக்கு
ஊட்டச்சத்து முற்றிலும்
ஊட்டப்பட்டுவிட்டதா?
குடிக்கத் தண்ணீரில்லாத
சோமாலியப் பெண்குழந்தை
பூப்பின் புனிதத்தை
எப்படிச் சுத்திகரிப்பாள்?
உடல் உயிர் உள்ளம்
உடை உணவு
என்ற பொருண்மைகளிலும்
பெண் குழந்தைகளுக்குப்
பன்னாட்டுப் பாதுகாப்பு
இருக்கிறதா?
கல்வியில்
இடைநிற்றல் என்பதில்
ஆண்பிள்ளைகள் அதிகமா?
பெண்பிள்ளைகள் அதிகமா?
பழங்குடியினப் பெண்கள்
மலைவிட்டிறங்கிச்
சமதளத்துக்கு
வந்துவிட்டார்களா?
தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப்
பெண் குழந்தைகளுக்கெல்லாம்
ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுமா?
இவைபோன்ற வினாக்களுக்கு
விடைகாணும்போதுதான்
மண்ணுலகத்தில்
பொன்னுலகம் காணும்
பெண்ணுலகம்
இனிவரும் உலகம்
கற்காலம் அழித்துத்
தற்காலம் தகர்த்துப்
பொற்காலம் காணுக;
பிற்காலம் பெண்ணுலகு ஆகுக!


