முன்னொரு காலத்தில், காலம் காலமாக யாழ் குடாநாட்டில் உள்ள கிராமங்களில் சாதி என்ற பாகுபாட்டில் நடக்கும் அடக்கு முறைகள்,கொடுமைகள், துன்புறுத்தல்கள் என்பவை எப்படியிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவை பற்றி சொல்ல தேவையில்லை.
அந்த சமூகத்தினை கல்வி,பொருளாதார மேம்பாட்டு வளர்ச்சிகள் என்பவற்றில் ,அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் நிலைமைகள் எல்லாவற்றினையும் தமது சிறு வயதிலிருந்து பார்த்து பார்த்து குமுறுவான் குப்பிழான் கிராமத்தில் மேற்குடி என்று சொல்லப்படும் சமூகத்தில் பிறந்து வளர்ந்து வரும் அந்த சிறுவன்.
அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனுக்கு சிறு வயதிலிருந்து கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறையில் ஏற்பட்ட குமுறல்மாதிரியான நிலையே இந்த சிறுவனுக்கும் அந்த காலங்களில் இருந்து வந்தது.
அவர்தான் இன்று அமர்த்துவமடைந்திருக்கும் சட்டதரணி/ அரசியல் ஆய்வாளர்
திரு.சி .அ .ஜோதிலிங்கம் அவர்கள்.
( பெயர்களில் தந்தையின் பெயரை மட்டும் முன்னுக்கு வைத்து அறிமுகப்படுத்தும் மரபு முறை நியாயமானதல்ல. இங்கு தாயின் பெயரும் சேர்க்கப்படல் வேண்டும் என்பது அவரின் புரட்சி வாதம்.
அவரது தந்தை பெயர் : சிவசுப்பிரமணியம். தாய் பெயர் அன்னபூரணம். எனவே தனது பெயரை அவர் சி.அ.ஜோதிலிங்கம் என ஓர் முன்னுதாரணமாக உருவாக்கி கொண்டார்.)
1977 - 1979ம் ஆண்டுகளில் சமூகத்தில் சாதி ஒடுக்குமுறைகள் மாறி ஓர் சமத்துவ நிலைமை உருவாக வேண்டுமென்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட பல அமைப்புகள் களத்தில் இறங்கியது.
யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து "அறவழி போராட்ட குழு'" என்ற அமைப்பு யாழ் குடாநாடுகளில் உள்ள இந்து ஆலயங்கள்,தேனீர் கடைகள்,பாடசாலைகள்,உணவகங்கள் யாவற்றிலும் ஒடுக்கப்பட்ட மக்களையும் சமமாக அனுமதிக்க வேண்டும் என்ற தீவிர அறவழி போராட்டங்களை நடாத்தி அதில் சமூக மாற்றங்களும் நடந்த வண்ணம் தொடர்கின்றது.
இந்த செய்திகள் பத்திரிகைகள்,ஊடகங்களிலும் பிரசித்தி பெற்று கொண்டிருக்கின்றது.
அந்த நேரம், அறவழி போராட்ட குழுவில் சேர்ந்து இயங்கிய, 23 வயது இளைஞனான திரு.சி.அ. ஜோதிலிங்கம் தமது குப்பிழான் கிராமத்திலும், அயல் கிராமங்களிலும் உள்ள ஒடுக்க பட்ட சமூக மக்களை ஓன்று சேர்த்து அவர்கள் மத்தியில் நின்று அவர்கள் சிந்தனையில் புரட்சி கரமான மாற்றங்களை உருவாக்குகின்றார்.
"நீங்கள் ஏன் அடக்கப்பட்டு ஒடுங்கி வாழ வேண்டும்?"
"தொடர்ந்து உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் கூலி வேலைக்கு அனுப்ப போகின்றிர்களா"?
"சுய தொழில் திட்டங்களினூடாக உங்கள் பொருளாதார வளர்ச்சிகளை முன் எடுக்க கூடாதா"?
இப்படியே தனி ஒருவனாக நின்று தனது போதனைகள்,உரைகளின் ஊடக இவரின் புரட்சி மாற்றங்கள் தொடர்கின்றது.
1979ம் ஆண்டு. ஆடி அமாவாசை தீர்த்த நாள்.
குப்பிழான்- கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் இவர் தலைமையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஆலய பிரவேசம் நடக்கின்றது. பலரின் ஆதரவுகள் இருந்தாலும் முரட்டு தனமான எதிர்ப்புகள் இன்னொரு பக்கம் கொதித்து எழுகின்றது. .
அந்த காலங்களில் யாழ் குடாநாடுகளில், இப்படியான புரட்சி கரமான போராட்டங்களில் கத்திகள்,பொல்லுகளுடன் லாரிகளில் வந்து இறங்கும் "தீண்டாமை வெகுஜன ஒழிப்பு இயக்கம்" மற்றும் மார்க்சீச,கம்யூனிஸ்ட் அமைப்புகள் ஏதாவது உதவிகள் வேண்டுமா ? என கேட்கின்றனர்.
அப்போது தலைமறைவு நிலையிலிருந்து துளிர் விடும் தீவிரவாத அமைப்புகள் இரகசிய பாதுகாப்பு வேண்டுமா ? என கேட்கின்றார்கள்.
"இது பல மேற்குடி என சொல்லப்படும் சமூகத்தின் பல இளைஞர்களின் ஆதரவோடு அறவழியில் நின்று செய்யும் சமூக மாற்றம். உங்கள் பாதைகளிலிருந்து மாறுபட்டது.கேட்டதற்கு நன்றி"
என சொல்லி அவர்கள் எவரையும் அனுமதிக்கவில்லை.
போராட்டம் அவர் தலைமையில் வெற்றி கரமாக அற வழியில்,அமைதியாக நடைபெற்று முடிந்தது. அடக்கு முறைகள் கிராமத்தில் மெல்ல மெல்ல மாறியது.
திரு.சி.அ. ஜோதிலிங்கத்தின் சிந்தனைகளும்,பாதைகளும் ஓயாது மாறி மாறி பல பாதைகளினூடாக இன்று அமரத்துவமடைந்த நாள் வரை பயணித்தது.


