TamilsGuide

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு - ஜெலன்ஸ்கி கடும் எதிர்ப்பு

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு பெற்ரோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவது, உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக அதனை நீடிப்பதற்கு உதவும் என ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. எனினும், இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் எரிபொருளைக் கொள்முதல் செய்வதன் மூலம் அந்த நாட்டுக்கு வருவாய் கிடைப்பதாக டிரம்ப் விமர்சித்திருந்தார்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு எதிராக வரி விதிக்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா முன்னெடுத்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர், அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உடனடியாக 300,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான டீசல் விநியோகிக்கப்படும் என்றும், நவம்பர் மாதத்தில் மேலும் 500,000 மெட்ரிக் தொன் வழங்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து கூடுதலாக ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் எரிபொருள் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைப்பதே தனது முக்கிய நோக்கம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த முடிவை விமர்சித்துள்ள ஜெலன்ஸ்கி, புட்டினுக்கு வழங்கப்படும் சலுகைகள் அமைதியைக் கொண்டுவராது எனக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுக்கு பெற்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிப்பது, முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய போரை நீடிப்பதற்கான முதலீடாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளைத் தளர்த்துவதற்குப் பதிலாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பதற்கும் பரஸ்பர அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.  
 

Leave a comment

Comment