முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையோடு இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் பாடல்களை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான டாக்கா ஹாசி மற்றும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி அதனைப் பெற்றுக்கொண்டார்.
‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார்.
விழாவில் நடிகர் நெப்போலியன் பேசுகையில், "இந்த திரைப்படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா என தோராயமாக 200-க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘பாரத விலாஸ்’ படத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நடித்திருப்பார்கள்.
ஆனால், எங்கள் ‘அமெரிக்க ஆவி’ படத்தில் உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "இப்படத்தில் நடித்திருக்கும் 200 பேரும் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் அமெரிக்காவின் பெரிய பெரிய நிறுவனங்களில் சாப்ட்வேர் என்ஜினியர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள், புரொபசர்களாகப் பெரிய பொறுப்பில் பணியாற்றுபவர்கள்.
கலை மீதான ஆர்வத்தால் இதில் நடித்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமான ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும்" என்றார்.
அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் பல்வேறு உலக நாட்டுத் திறமையாளர்களை ஒன்றிணைத்து, ஹாரர் திரில்லர் பாணியில் முற்றிலும் அமெரிக்க மண்ணில் உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ படத்தின் டிரெய்லர் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


