முன்னணி இளம் தமிழ் நடிகர் மணிகண்டன் இந்த மிரட்டலான போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் , ரத்த வெள்ளத்தில் தலைகீழாக கிடக்கும் பெண், அவரைச் சுற்றி சிதறிக் கிடக்கும் தட்டு, கத்தி, ஸ்பூன், ஃபோர்க், மரக்கரண்டி உள்ளிட்ட பொருட்களுடன், அந்த ரத்தக் காட்சியைக் கடந்து செல்லும் நீல நிற கார் என மர்மத்தையும் பதற்றத்தையும் ஒரே பார்வையில் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெண்ணைச் சுற்றி பரவியிருக்கும் ரத்தம் காரின் பாதையாக நீளும் காட்சி, இந்தக் கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தையும், கதையின் விசாரணைத் தன்மையையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
‘இறுதிபக்கம் VOL.02 – FRESH BLOOD’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், படம் ஒரு புதிய ரத்தம் தோய்ந்த மர்மம் மற்றும் பரபரப்பான திரில்லர் களத்தை கையில் எடுத்திருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் ஒரு பரபரப்பான க்ரைம் திரில்லர் கதையை இயக்குநர் கையில் எடுத்துள்ளார். படத்தின் மையக் கதையில் ஒரு மர்மக் கொலை நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தது யார் என்று ஒரு தரப்பு தீவிரமாகத் தேட, மற்றொரு தரப்போ தங்களின் குற்றம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்று அதை மறைக்கப் போராடுகிறது.
இந்த இரு தரப்புக்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான 'ஆடு-புலி ஆட்டம்' தான் படத்தின் முக்கிய திரைக்கதை எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘குமார சம்பவம்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், அபிஷேக் ஜோசப், சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.
சென்னை மற்றும் பெரம்பலூர் சுற்றியுள்ள பகுதிகளில் கதையின் இயல்பான சூழலுக்கு ஏற்ப இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்டத் (Post-Production) பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


