TamilsGuide

குழந்தை வளர்ப்பு மிகப்பெரிய பொறுப்பு - தயாராக இல்லை என்றால் பெற்றெடுக்காமல் இருப்பதே நல்லது - நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும், கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை வரலட்சுமி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு தனது திரையுலகப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் அவர், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

நேர்காணலில் பேசிய வரலட்சுமி, தனக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்ற தனது முடிவை திட்டவட்டமாகத் தெரிவித்தார். "இது குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஏதேனும் ஒரு உடல்நிலை குறைபாடு காரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

இது முற்றிலும் எனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு. எனது கணவர் நிக்கோலாயும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். இருவருமாக இணைந்தே இந்த முடிவை எடுத்தோம்" என்று அவர் விளக்கமளித்தார்.

திருமணமான தம்பதிகள் அனைவரும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று கூறிய வரலட்சுமி, பெற்றோர் என்ற பொறுப்பு குறித்துப் பேசுகையில்: "ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்பு, அதன் வளர்ப்புக்கான முழுப் பொறுப்பையும் ஏற்க நாம் தயாராக இருக்கிறோமா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

அந்தப் பொறுப்பை முழுமையாக ஏற்கத் தயாராக இல்லாதவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும் கூட ஒரு வகையான பொறுப்பான முடிவுதான்" என்று தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

நிக்கோலாய் சச்தேவுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். அவரைப் பற்றிக் குறிப்பிட்ட வரலட்சுமி, "அவரை நான் எனது சொந்த மகளாகவே கருதுகிறேன்.

அதுமட்டுமின்றி, எங்களிடம் இரண்டு செல்ல நாய்கள் உள்ளன. அவற்றையும் நாங்கள் எங்கள் குழந்தைகளைப் போலத்தான் வளர்த்து வருகிறோம். அவர்கள்தான் எங்கள் குடும்பம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சமூக வழக்கங்களுக்கு மாறாக, குழந்தை வளர்ப்பில் உள்ள பொறுப்புணர்வைக் கருத்தில் கொண்டு வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள இந்த வெளிப்படையான மற்றும் தைரியமான கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 

Leave a comment

Comment