TamilsGuide

அனோஜனை நேரில் சந்தித்த இலங்கைத் தூதுவர்

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ. எல். அமீர் அஜ்வாத், தம்மாம் மத்திய சிறையில் உள்ள சிவராசா அனோஜனை ஒக்டோபர் 8 ஆம் திகதி சந்தித்து, அவரது நலம் மற்றும் தற்போதைய நிலை குறித்து விசாரித்துள்ளார்.

இது குறித்து ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் நலன் குறித்து அறிந்துகொள்வதற்காக, அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட், கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி தமாம் மத்திய சிறைச்சாலைக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார்.

ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தமாம் மத்திய சிறைச்சாலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சிவராசா அனோஜனுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்ட தூதுவர், அவரது தேவைகள் மற்றும் கவலைகளைக் கேட்டறிந்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் வழிகாட்டலின் கீழ், அனோஜனுக்கு வழங்கக்கூடிய அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்குவதற்கு இலங்கைத் தூதரகம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். 

மேலும், அனோஜன் தூதரகத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு ஏதுவாக, தனது தொடர்பு விபரங்களையும் தூதுவர் அவரிடம் வழங்கியுள்ளார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தூதுவர் அமீர் அஜ்வாட், அனோஜன் சிவராசா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவரது நலனைப் பேணுவதில் சவுதி அரேபிய சிறைச்சாலை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலையின் மருத்துவ அதிகாரி ஆகியோரையும் சந்தித்த தூதுவர், சிறைச்சாலைக்கான தனது விஜயத்தை ஏற்பாடு செய்வதில் ஒத்துழைப்பு வழங்கியமைக்கும், அனோஜனின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணுவதில் அக்கறை செலுத்தி வருவதற்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனோஜனின் மேன்முறையீட்டு நடவடிக்கைகளுக்காக, குறிப்பாக சவுதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment