TamilsGuide

கனடாவில் 48,000-க்கும் மேற்பட்ட கார்களைத் திரும்பப் பெறுகிறது கியா

ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கனடாவில் 48,000-க்கும் மேற்பட்ட கார்களைத் தென்கொரியாவின் பிரபல 'கியா' வாகன உற்பத்தியாளர் நிறுவனம் திரும்பப் பெறுகிறது.

கனடா போக்குவரத்துத் துறைவெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட 48,070 'கியா செல்டோஸ்' எஸ்.யு.வி கார்கள் இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இது 'ஆல்-வீல் டிரைவ்' வசதி கொண்ட கார்களை மட்டுமே பாதிக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் அமைந்துள்ள 4WD கட்டுப்பாட்டுப் பகுதியில் காரின் உட்புறத்திலிருந்து உப்பு மற்றும் ஈரப்பதம் படர வாய்ப்புள்ளது.

காலப்போக்கில் இதனால் அரிப்பு ஏற்பட்டு, மின் கசிவு உருவாகக்கூடும். இதன் காரணமாக, காரை நிறுத்தி, என்ஜினை அணைத்து வைத்திருக்கும் நேரத்திலும் கூட அதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பழுதுபார்க்கும் பணி முடியும் வரை, கார்களைக் கட்டடங்கள் அல்லது பிற வாகனங்களுக்கு அருகில் நிறுத்தாமல், திறந்தவெளியில் நிறுத்துமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 

Leave a comment

Comment