TamilsGuide

உறைபனி குளிரில் கஷ்டப்படும் ஊழியர்களுக்கு சொகுசு BMW கார்களை பரிசாக வழங்கிய சீன உணவக அதிபர்

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாஜுவோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புகழ்பெற்ற 'பீஃப் ஹாட்பாட்' (Beef Hotpot) உணவகச் சங்கிலியின் உரிமையாளர் மா யான்லி தான் இந்த நெகிழ்ச்சியான காரியத்தைச் செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 24 அன்று, மா யான்லி தனது உணவகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களை நேரடியாக கார் ஷோரூமிற்கு அழைத்துச் சென்று கார்களைப் பரிசளித்தார்.

இந்த கார்களின் ஒவ்வொன்றின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 37 லட்சம் ஆகும். இதற்கான முழுத் தொகையையும் இரண்டு வாரங்களுக்கு முன்பே மா யான்லி செலுத்தியுள்ளார்.

இந்த கார்கள் ஊழியர்களின் பெயரிலேயே நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஊழியர்கள் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை.

மேலும், இதற்குப் பகரமாக எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவும் அவர் ஊழியர்களை வற்புறுத்தவில்லை.

கடந்த குளிர்காலத்தில் அதிகாலையில் உணவகத்திற்கு வந்த மா யான்லி, அங்கு கடந்த 8 வருடங்களாகப் பணிபுரியும் லி ஜியே என்ற பெண் ஊழியரைக் கண்டு உருகிப்போனார்.

கடுமையான குளிர்காற்றில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்ததால், லியின் முகம் குளிரில் சிவந்து, காதுகள் ஊதா நிறமாக மாறி, கைகள் முற்றிலும் விறைத்துப் போயிருந்தன.

இதைப் பார்த்த மா யான்லி, "என்னால் காரில் அமர்ந்து கதகதப்பாகவும் வசதியாகவும் வர முடிகிறது, என் நிறுவன வளர்ச்சிக்காக உழைக்கும் இவர்களால் ஏன் முடியாது?" என்று தனக்குள்ளேயே கேள்வி எழுப்பிக் கொண்டார்.

"என் தொழில் வாழ்க்கையில் நான் வெற்றியை அடைந்துள்ளேன். ஆனால், என் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு எனது ஊழியர்களின் கூட்டு உழைப்பே காரணம். எனவே, என் நிறுவனத்தின் வெற்றியில் என் தொழிலாளர்களுக்கும் பங்கு இருக்க வேண்டும்" என்று உணவகத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவமுள்ள மா யான்லி பெருமையுடன் கூறியுள்ளார்.

லி ஜியேவுக்கு வெள்ளை நிற BMW காரும், மற்றொரு சிறந்த ஊழியரான லியு யிங்யிங் என்பவருக்கு சாம்பல் நிற BMW காரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

சீனாவில் தங்களது ஊழியர்களுக்கு இது போன்ற அள்ளிக்கொடுக்கும் முதலாளிகள் தொடர்ந்து கவனம்பெற்று வருகின்றனர்.

இதேபோல், ஹெனான் குவாங்ஷான் கிரேன் நிறுவனத்தின் தலைவரான சுய் பெய்ஜூன் என்பவர், கடந்த வசந்த கால திருவிழாவின் போது தனது நிறுவன லாபத்தில் மூன்றில் இரண்டு பங்கு தொகையான சுமார் ரூ. 225 கோடி ஊழியர்களுக்குப் போனஸாக வழங்கினார்.

மேலும், ஒவ்வொரு மகளிர் தினத்திற்கும் தனது 2,000 பெண் ஊழியர்களுக்கு ரூ.9,500, கிராமப்புற ஊழியர்களுக்குப் பயிர் அறுவடை உதவித்தொகையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.14,270 வழங்கி அவர் "அதிகப் பணம் கொடுக்கும் முதலாளி" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
 

Leave a comment

Comment